குறும்பர் இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில் கலங்கல் கம்பளி...

குறும்பர்(Kurumbar) இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில்  கலங்கல் கம்பளி...
கோவை மாவட்டம், சூலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் கலங்கல். இந்த கிராமமும், இதைச் சுற்றியுள்ள அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, நடுப்பாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, குரும்பபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குரும்பை ஆடுகளில்(Kurumba)இருந்து ரோமங்களை எடுத்துத் தயாரிக்கப்படும் கம்பளிகள் கோவை மட்டுமன்றி, தமிழகம் முழுவதிலும் வெகு பிரபலம்.
இதேபோல, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் முன்பணம் செலுத்தி கம்பளிக்கு ஆர்டர் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்தத் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித் தனியாக தேவைக்கு ஏற்ப ஆடுகளை வாங்கி அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மாதங்கள் வரை மேய்ப்பார்கள்.
பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை ஆடுகளைக் கழுவி சுத்தம் செய்து, அதன் ரோமங்களை வெட்டித் தரம் பிரித்து அரைவை இயந்திரத்தில் அரைத்து கம்பளி நெய்து வந்தனர். இந்தக் கம்பளிகள் சுமார் 10- 15 ஆண்டுகள் உழைக்கும் தன்மை கொண்டவை.
ஆடுகளின் கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிறக் கம்பளிகளுக்கு வரவேற்பு அதிகம். மேலும், கம்பளியின் விலையும் சற்று கூடுதலாக அதாவது, ரூ. 4 ஆயிரம்- ரூ. 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். இதேபோல, வெள்ளை ரோமங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் கம்பளி ரூ. 2,500- ரூ. 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நரை முடியைக் கொண்டு நெய்யப்படும் கம்பளிகள் ரூ. 2 ஆயிரம் வரை விற்பனையாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது வரவேற்பு:
ஆனால், காலப்போக்கில் இளைய தலைமுறையினரிடையே போதிய வரவேற்பைப் பெறாததும், குரும்பை ஆடுகளுடன்(Kurumba)வேறு இன ஆடுகளின் கலப்பு இனப் பெருக்கம் காரணமாக ஆடுகளில் ரோமங்கள் குறைந்த அளவே வளர்வதும் இந்தத் தொழிலின் அழிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
அதேசமயம், கலங்கல் பகுதியில் வைத்திருந்த ஒரு தனி நபரின் அரைவை இயந்திரம் விற்பனை செய்யப்பட்டதும் இந்தத் தொழில் பின்னடைவுக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது. எனினும், தற்போது ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே கைகளால் நெய்து கம்பளி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கலங்கலில் கைகளால் கம்பளி நெய்யும் தொழில் செய்து வரும் என். ராமசாமி (80)- அம்மாசையம்மாள் (72)
தம்பதியினர் கூறியதாவது:
கடந்த மூன்று தலைமுறைகளாக கம்பளி நெசவுத் தொழில் செய்து வருகிறோம். அப்போது இந்தப் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், சூலூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சாலைகள் அதிகரித்ததால், பலரும் இந்தத் தொழிலைக் கைவிட்டு அந்த ஆலைகளில் சேர்ந்தனர். ஒரு கம்பளி நெய்ய இருவர் சேர்ந்து உழைத்தால் குறைந்தது 15 முதல் 20 நாள்கள் தேவைப்படுகின்றன.
ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாததால், அடுத்த தலைமுறையினர் இந்தத் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், அரைவை இயந்திரம் இல்லாததால், ஆட்டின் ரோமங்களைப் பிரித்து நெய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆட்டின் ரோமங்களை சரியான அளவில் பிரித்தால் மட்டுமே தறியில் நெய்ய முடியும் என்றனர் அவர்கள்.
குரும்பை ஆடுகளின்(Kurumba)ரோமங்களை விலைக்கு வாங்கி வந்தாலும் அவற்றைப் பிரித்துத் திரிப்பதற்கும், நெய்யவும் உடல் தகுதியும் முக்கியமானது. ஆகவே, இந்தத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நவீன அரைவை இயந்திரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், ஆடுகளை வாங்க மானியம் வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!