குறும்பர் இன பழங்குடி மக்களை பற்றி ஒலை சுவடிகள் தரும் செய்திகள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழக பழங்குடி மக்கள் என்ற நூல் டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல். இது இரண்டு வகையில் பல அரிய தகவல்களைத் தருகின்ற ஒரு நூலாக அமைகின்றது.
மெக்கன்சியின் ஆவணச் சேகரிப்பு தமிழக நிலப்பரப்பில் வாழும் சில பழங்குடி மக்களைப் பற்றி நாம் தற்சமயம் அறிந்து கொள்ள வாய்ப்பை வழங்குகின்றது
குறும்பர் பழங்குடி இனத்தோர் பற்றிய பல வரலாற்று சமூக நிலை தகவல்களை அறிந்து கொள்ள இந்த ஆவணக் குறிப்புக்கள் உதவுகின்றன.

இந்த நூலை வாசித்துக் கொண்டிருந்தபோது பழங்குடி மக்களைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. இந்திய நில அளவையாளராக பணியாற்றிய கெர்னல் கோலின் மெக்கன்சி அவர்கள் தாம் தொகுத்த தகவல்களைச் சேகரித்து வைத்ததின் அடிப்படையில் இந்த மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய பல்வேறு தகவல்களை நாம் இன்று அறிந்து கொள்ள முடிவதற்கான் வாய்ப்பு அமைந்திருக்கின்றது என்பதை மறந்து ஒதுக்கி விட முடியாது.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா முழுமையும் பயணித்தவர் மெக்கன்சி. தன்னோடு உள்ளூரில் மக்கள் பேசும்  மொழியில் பரிச்சயமானோரை தனது உதவியாளர்களாக அமைத்துக்குக் கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று சமூகவியல், மக்கள் வாழ்வியல் வரலாறு, மொழி, இலக்கியம் என பல தகவல்களைத் தொகுத்தவர் மெக்கன்சி.

அந்த வகையில் குறும்பர் எனப்படுவோர்  ஒரு வகை பழங்குடி மக்கள் என்பதோடு அவர்களைப் பற்றிய தகவல்களும் மெக்கன்சி ஆவணத் தொகுப்பில் இடம்பெருகின்றன.. இதனைப் பற்றிய விபரங்களை மெக்கன்சி சுவடிகளில் தமிழக பழங்குடி மக்கள்  என்னும் தலைப்பிலான இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. இதில் காணப்படும் தகவல்களை நான் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். குறும்பர் பழங்குடி இனத்தோர் பற்றிய வரலாற்று சமூக தகவல்களை வழங்க விரும்புவோர் இந்த இழையில் பங்களிக்க வரவேற்கின்றேன்.

மெக்கன்சி ஆவணத் தொகுப்பில் உள்ள தமிழ்ச் சுவடித் தொகுப்பில் 10 சுவடிகளில் குறும்பர் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த 10 சுவடிகளில் 7 சுவடிகள் மூல சுவடிகள். ஏனைய மூன்று சுவடிகள் மூல சுவடியிலிருந்து படியெடுக்கப்பட்டவை.
குறும்பர் எனும் பெயர் கொண்ட பழங்குடியினத்தினர் பூர்வீகத்தைப் பற்றி விளக்கும் தகவல்கள் சில தமிழ் லெக்சிகனில்  பதிவாக்கப்பட்டிருப்பதை  இந்த நூல் குறிப்பிடுகின்றது.
குறும்பர் என்பர் குறுனிலமன்னர்
குறும்பர் என்பர் பழமையான சாதியினர்
குறும்பர் என்பர் வேடர்
இடைச்சாதியில் முரட்டுக் கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்

தமிழ் இலக்கியங்கள் வெருங்கதை, சீவகசிந்தாமணி, பிங்கல நிகண்டு,  புறநானூறு, கூர்ம புராணம், மலைபடுகடாம் ஆகிய நூல்களில் குறும்பர் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன என்ற குறிப்பையும் காண்கின்றோம்.

வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற வேள்விக் குடி செப்பேட்டிலும் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பிற் செருவென்றும் என்று குறும்பர்கள் குறிப்பிடப்படுவதையும் குறிப்பிடவேண்டும்.

ஆயினும் 1891ம் நூற்றாண்டின் புள்ளி விபர அறிக்கை என்பது..
குறும்பர் அல்லது குறுபா என்போர் பழங்கால குறும்பர்கள் அல்லது பல்லவர்கள். ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுமையும் வலிமையாக இருந்து குறிப்பாக ஏழாம் நூற்றாண்டில் ஆட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த பல்லவ மன்னர்கள் இனத்தோர் இவர்கள் என்று குறிப்பிடுகின்றது.  7 அல்லது 8ம் நூற்றாண்டின் ஆதொண்டை என்ற சோழ அரசனால் குறும்பர்கள் பல்வேறு இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டார்கள். பலர் மலைகளுக்கு ஓடி மறைந்து கொண்டனர். அவர்கள் நீலகிரி, வேநாடு, கூர்க் , மைசூர் ஆகிய இடங்களில் இன்றும் காணப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதே நூல் நீலகிரி பகுதியில் வசிக்கும் குறும்பர்கள் ஆடுமாடுகளை வளர்க்கும் குறும்பர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என குறிப்பிடுகின்றது. இவர்களது மொழி, உடை, பழக்கம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கின்றது என்றும் அறிய முடிகின்றது.

இது மட்டுமன்றி டி.வி.மகாலிங்கம் குறும்பர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திராவிட நாட்டில் தொண்டைமண்டலம் வரை தமது  ஆட்சியை கமண்ட், குறும்பப்பிரபு, திராவிடதேசாதிபதி எனும் பெயர்களுடன் நடத்தி வந்தார்கள் என்றும் குறிப்பிடுவதையும், ஆர்.சத்தியநாதய்யர், தாலமியின் குறிப்புக்களிலும் அசோகனின் கல்வெட்டுக்களிலும் அர்த்த சாத்திரத்திலும் இரகுவம்சத்திலும் இடம் பெற்றுள்ள புலிந்தர் என்பவர்கள் குறும்பர்களே என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது.

குறும்பர்கள் பல்லவர்களின் பிரதினிதி என்ற வகையில் பரீசிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பழங்குடிகள் என்று அறிஞர் மீனாட்சி எழுதியுள்ளமையும் ஒரு கருத்தாகின்றது. இந்தியாவிற்கு வந்த அவர்கள் வட இந்தியப் பகுதியில் நீண்ட காலம் தங்க முடியாமல் தெற்கு நோக்கி வந்து, காஞ்சிபுரம் வந்து  காஞ்சியில் தங்கினர் என்ற குறிப்பு  கெஸட்டியரில் காணக்கிடைக்கின்றது. வெங்கய்யாவின் ஆய்வு இதே நோக்குடன் சென்று இம்மக்கள் தென்னிந்தியா வந்து குடியமர்ந்த காலத்தையும் இவர் நிர்ணயிக்கின்றார். வைகுந்தப் பெருமாள் கோயிலில் உள்ள பல்லவ மன்னர்கள் சிற்பத்தில் உள்ள சிகை அலங்காரத்தை ஒத்த  கி.பி.2 அல்லது 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக்டீரியன் அரசர்களது சிகை அலங்காரத்தை ஒத்திருப்பதை இதற்கு அவர் ஆதாரமாகக் காட்டுகின்றார். அறிஞர் இராசநாயகம் தென்னிந்தாயாவைச் சேர்ந்தவர்களே என்றும் அல்லது ஈழத்தைச் சேர்ந்த சோழர் நாகர் தொடர்பை உடையவர்கள் என்றும் குறிப்பிடுவது மாறுபடுவதாக உள்ளது.

குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்டவர்கள் என்பதற்கு சான்று தருவதாக மெக்கன்சி சுவடிகள் அமைகின்றன.
மெக்கன்சி சுவடிகளில் குறிப்பிடப்படும் குறும்பர்கள் பற்றிய தகவல்கள், இவர்கள் தொண்டை மண்டலத்தைச் சார்ந்தோர் என்ற வகையில் குறிப்பதாக உள்ளது.  அதில் குறிப்பிடத்தக்க ஒரு சுவடி சன்னியாசி குறும்பர்  சரித்திரம் . இந்தச் சுவடியில் கீழ்க்காணும் வரிகள் இடம்பெறுகின்றன.
தங்கள் மதமும் பிரபுத்துவமும் புராதீனமாய் தங்களுக்கே உடையதென்று கிறோதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

படுவூர் பாண்டிக் குழி வரலாறு என்னும் ஒரு சுவடியில்
இவாளே இந்த ஊருக்குப் புராதீனமான குடிகளாயிருந்தார்கள்
... என்ற குறிப்பைக் காண்கின்றோம்.

ஆக இவ்வகைச் சொற்றொடர்கள் இவர்கள் வேற்று தேசத்திலிருந்து வந்தவர்களல்ல என்றும் இப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் கருதத்தக்க வகையில் அமைகின்றது.  ஆனால் இவை மட்டுமே முழுமையான இவர்களது பூர்வீகத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது.

இந்தக் குறும்பர்கள் ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சன்னியாசி குறும்பர்  சரித்திரம் சுவடியில் வரும் கீழ்க்காணும் வாசகங்களைக் குறிப்பிடலாம்.
இவாள் ஆளுகைக்குள்ளாகக் காஞ்சிபுரம், சென்னைப்பட்டணம், மாவாலிபுரம், வடப்பட்டணம், கோட்டைவரை சத்தேரக்குறைய ஆற்காட்டு சபா முழுவதும் அடக்கமாயிருந்தது. தங்களுக்கு உண்டாயிருந்த தளங்களுடன் ராச்சியம் பண்ணி சந்ததி வரிசையாய்த் துடந்து வந்தார்கள். அவாருட பரிபாலனம் துரைத்தனம் வரைக்கும் ஆட்சியிலிருந்ததுக்கு யாதொரு சந்தேகமுமில்லை.

இவர்கள் கோட்டை கட்டி ஆண்டார்கள் என்பதைக் குறிப்பிடும் வகையில் மெக்கன்சி சுவடிகளின் கல்வெட்டு பதிவுகள் சில சான்றுகளைத்தருகின்றன. குறும்பர்களுக்கு 64 கோட்டைகள் இருந்தன என்று குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில ஊர்களின் பெயர்கள் மட்டுமே மெக்கன்சி சுவடிகளில் அடையாளம் காணப்படுகின்றன, அவையாவன
புழல்
பட்டிப்புலம்
சாலவன்குப்பம்
நெரும்பூர்
அணைக்கட்டு
ஆமூர்
புலியூர்
அயீசிகுளம்
களத்தூர்
சம்பூர்
தமுனூர்
ஈக்காடு
நெடுமரம்
..ஆகிய 13 இடங்களின் பெயர்களே காணக்கிடைக்கின்றன.

இதில் குறிப்பாக
புழல்
பட்டிப்புலம்
சாலவன்குப்பம்
நெரும்பூர்
அணைக்கட்டு
நெடுமரம்

இத்தகைய கருத்துக்களைக் காணும் போது குறும்பர்களை பல்லவர்களின் முன்னோர்கள் என்றோ, பல்லவர்களின் பிரதினிதிகள் என்றோ ஏற்றுக் கொண்டால் அவர்கள் ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றார்கள்  என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

இன்னூல் ஆசிரியர், மெக்கன்சி சுவடி தரும் தகவல்களோடு நேரடி களப்பணி மேற்கொண்டபோது சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டைகளோடு குறும்பர்கள் சமூகத்தோடு இணைத்து கூறப்படுவதை  கவனித்ததாக நூலில் குறிப்பிடுகின்றார்.

ஆயினும் இக்கோட்டைகளின் அமைப்பு பற்றியோ, அவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாட்டு எல்லை பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை.
குறும்பர் எனப்படும் பழங்குடி இனத்தோர் ஆட்சி செய்து வாழ்ந்த பகுதிகளைப் பற்றி குறிப்பாகச் சொல்லியிருந்தேன். அதில் புழல் பகுதியில் குறும்பர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் இருப்பதைப் பற்றி மெக்கன்சி சுவடி சொல்லும் தகவல்களைப் பார்ப்போம்.

​சன்னியாசி குறும்பர்  சரித்திரம் எனும் சுவடி குறும்பர்களின் தலைநகர் கோட்டை இருந்த இடம்  இப்போது கோட்டைக்கரைமேடு என அழைக்கப்படுவதாகச் சொல்கின்றது. அவ்வூர் மக்களை இது தொடர்பாக நூலாசிரியர் விசாரித்தபோது அம்மக்கள் புழலை குறும்பர்பூமி என்று குறிப்பிட்டார்கள் என்றும்  கோட்டைக் கரைமேட்டை குறும்பமேடு  என்று குறிப்பிட்டார்கள் என்றும் அறிய முடிகின்றது.

கோட்டைக்கரைமேடு எனச் சொன்னாலும் இப்பகுதி இப்போது மேடாக இல்லை. அப்பகுதியை அரசு சமப்படுத்தியது. அப்படி சமப்படுத்தியபோது  அப்பகுதியில் நிறைய சாம்பலும் பானைகளும் முதுமக்கள் தாழிகளும்  வெளிப்பட்டதாக நூலாசிரியர் பேட்டிகண்ட  திரு.கண்ணப்பன் என்பவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்சமயம் இப்பகுதி மத்திய சிறைச்சாலைப் பகுதியாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது.
புழல் பகுதியில் குறும்பர்கள் வழ்ந்தமைக்கான சான்றுகள் இருப்பதை மெக்கன்சி சுவடி குறிப்பிடுவதை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அங்கே குறிப்பாக குறும்பர் இனத்தோர் வாழ்ந்த பகுதி புழலுக்கு வெளியே உள்ள கன்னடப் பாளையம் என அழைக்கப்படுகின்றது. 1942ம் ஆண்டில் இராணுவத்தினர் இபகுதியில் வந்து முகாமிட்டமையினால் இப்பகுதியில் வாழ்ந்தோர் புழல் நகருக்கு இடமாற்றம் செய்து இங்கு வந்தனர். இராணுவம் திரும்பிச்சென்று விட்ட பின்னரும் இவர்கள் மீண்டும் கன்னடப் பாளையம் பகுதிக்குத் திரும்பிச் செல்லவில்லை. புழல் மக்கள் இவர்களைக் கன்னடியர் என்று அழைக்கின்றனர்.

அங்கு வசிக்கும் குறும்பர் இனத்து இன்றைய மக்களை விசாரிக்கும் போது அவர்கள் குறும்பர்கள் புழலை ஆண்ட செய்தியை வழி வழியாகக் கேட்டு வருவதை பதிவு செய்திருக்கின்றனர். கால் நடைகளை வளர்த்தலை இவர்கள் தங்கள் தொழிலாகச் செய்து வந்திருக்கின்றனர்.

புழல் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்படும் ஒரு ஆதிநாதர் கோயில் இருப்பதாக நூல் குறிப்பிடுகின்றது. இந்தக் கோயில் தமிழ்ச்சமணக் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது, இன்றைய நிலையில் கருவறை தவிர்த்த ஏனைய பகுதிகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இக்கோயில் உள்ளது. இங்கு தமிழ்ச் சமனர்களே பூசை செய்பவர்களாக இருகின்றனர்,

இதனை நோக்கும் போது புழல் பகுதியில் வாழ்ந்த குறும்பர்கள் சமண சமயத்தைப் பின்பற்றியோராக இருந்திருக்கும் வாய்ப்பும் உண்டு.

Comments

  1. The South Indian first kingdom vijayanagar is old people

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!