பெருமிழலைக் குறும்ப நாயனார் 


    மிழலை நாட்டு மிழலை (தேவமலை)

    இறைவர் திருப்பெயர்:தேவநாதர்.
    இறைவியார் திருப்பெயர்:தேவநாயகி.
    தல மரம்:
    தீர்த்தம் :தேவ தீர்த்தம்
    வழிபட்டோர்:குறும்ப நாயனார்.

    தல வரலாறு

    • இது 'பெருமாநல்லூர்' என்று வழங்கியது; இப்பெயரும் இன்று மாறி, வழக்கில் "தேவமலை" என்று வழங்குகிறது. (இங்குள்ள மலையின் பெயரே தேவமலையாகும்.)

    சிறப்புக்கள்

    • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

       

    • குன்றைக் குடைந்து கோயில் எடுத்துள்ளனர்.

       

    • ஊரயமான மலைப் பகுதியில் கோயில் தனிமையாகவுள்ளது.

       

    • இது பெருமிழலைக் குறும்ப நாயனாரின் அவதார தலம். நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தேவர்மலையில் கொண்டாடப்படுகின்றது.
      	அவதாரத் தலம்	: மிழலைநாட்டு மிழலை (அல்லது மிழலைநத்தம் எனும் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலம்) - ஆய்வுக்குரியது.
      	வழிபாடு		: குரு வழிபாடு.
      	முத்தித் தலம் 	: தேவமலை என வழங்கும் மிழலைநாட்டு மிழலை (பெருமிழலை).
      	குருபூசை நாள் 	: ஆடி - சித்திரை.
      

       

    • தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது.

       

    • பெரிய குடவரைப் பிள்ளையார் உள்ளார்.

       

    • சில படிகள் கீழிறங்கிப் பார்த்தால் சில முனிவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

       

    • மண்டபத்தில் அம்பாள் திருமேனி தனியேயுள்ளது; தேவ தீர்த்த முள்ளது.

       

    • ("தேவமலை"க்கு அருகில் உள்ளது பேறையூர். இங்குள்ள நாகநாத சுவாமி கோயில் மிகப் பிரசித்தி பெற்றப் பிரார்த்தனைத் தலமாகும். எண்ணற்ற நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. இஃது ராகு தோஷ நிவர்த்தி தலம். இங்குச் செல்வோர் இப்பேறையூர்ச் சிவாலயத்தை அவசியம் தரிசித்து வரலாம்.)

       

    • குறிப்பு :- 'மிழலை நாட்டு மிழலை' என்னும் இத்தலம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலமென்று கூறுவாரும் உள்ளார்.

    • பெருமிழலைக் குறும்ப நாயனார் வரலாறு (மூலம்)

    அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டை - காரைக்குடிச் சாலையில், நடன சமுத்திரம் ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடந்து - வலமாகப் பிரியும் பொன்னமராவதிச் சாலையில் வந்து - பேறையூர் சாலையில் பிரிந்து பேறையூரை அடைந்து - நற்சாந்துப்பட்டி போகும் சாலையில் 2 கி.மீ. சென்று - குமரமலைக்குப் போகும் சாலையில் 1 கி.மீ. சென்றால் - "தேவமலை"க்குப் போகும் வண்டிப்பாதை வரும், அதிலிருந்து 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். (கடினமான பயணம், ஆங்காங்கே விசாரித்துச் செல்வது நலம்.)

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 1706-1 

வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 1706-2 

நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 1706-3 

மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 1706-4 

2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 1707-1

 சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 1707-2 

இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 1707-3 

முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 1707-4 

3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 1708-1 

கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 1708-2 

வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 1708-3

 புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 1708-4 

4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 1709-1 

மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 1709-2

 சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 1709-3

 நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 1709-4

5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 1710-1 

கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 1710-2 

செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 1710-3 

உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 1710-4 

6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 1711-1 

ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 1711-2 

மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 1711-3 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 1711-4

 7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 1712-1

 பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 1712-2 

மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 1712-3 

சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 1712-4 

8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 1713-1 

செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 1713-2 

மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 1713-3 

நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 1713-4 

9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 1714-1 

நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 1714-2 

கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 1714-3

 எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 1714-4 

10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 1715-1 

காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 1715-2

 ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 1715-3 

மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 1715-4 

11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 1716-1

 கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 1716-2

 மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 1716-3 

குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 1716-4

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!