குறும்பர் இன பழங்குடி மக்களின் வாழ்வியலை பேசும் ஓவியங்கள்!


குறும்பர் இன பழங்குடி மக்களின் வாழ்வியலை பேசும் ஓவியங்கள்!

வெளிப் பார்வைக்கு சாதாரண ஓவியங்களாகத்தான் தெரிகின்றன. உற்றுப் பார்த்து, இது என்ன, எப்படி, ஏன் என்பதைக் கேட்டறிந்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பின்னால் குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள்…

சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் சி.பி.ஆர்ட் சென்டரில் அந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மிகப் பெரிய கேன்வாஸில் இரண்டு பேர் மும்முரமாக ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்துப் பேசினோம். அவர் பெயர் பாலசுப்ரமணி.

பாலசுப்ரமணிக்கு சொந்த ஊர் பாவியூர். ‘பாவி’ என்றால் கிணறு என்று ஓர் அர்த்தம் இருக்கிறதாம். ஊட்டி, கோத்தகிரியில், சோளூர் மட்டத்துக்கு அருகே இருக்கிறது பாவியூர். மலை கிராமம். மொத்தம் 130 ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு புண்ணியத்தில் மின்சாரம் இருக்கிறது. வெளியுலகத் தொடர்பு கொள்ள ஒரே ஒரு பேருந்து வந்து செல்கிறது. அதுவும் நேரடியாக ஊருக்கு வருவதில்லை. ‘காபி ஸ்டோர்’ என்கிற அத்தியூர் மட்டத்துக்கு அருகே இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டுப் போய்விடும். அங்கிருந்து பிரியும் மண்சாலையில் நடந்தால் பாவியூருக்குப் போய்விடலாம்.  பிள்ளைகள் படிக்க ஐந்தாவது வரையான ஆரம்பப்பள்ளி இருக்கிறது. மேற்கொண்டு படிக்க, கீழ் கோத்தகிரிக்கோ, மேல் கோத்தகிரிக்கோதான் போக வேண்டும். இப்படிப்பட்ட உள்ளடங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்கள் இந்த ஓவியர்கள்.

‘‘இந்த ஓவியங்களை எல்லாம் நாங்க வரைவோம்னு நினைக்கவே இல்லை. ஆதிவாசிகளுக்கு ஓவியங்கள் வரையும் பழக்கம் இருக்கு. குகைகள்ல, மலைப் பாறைகள்ல வரைவாங்க. அந்தப் பழக்கம் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. கோயில் திருவிழா, பண்டிகைன்னா வீட்ல இருக்குற சுவத்துல சித்திரங்கள் வரைவாங்க. வீடுன்னா நீங்க நினைக்கிற மாதிரி காரை வீடு இல்லை. மண் சுவரால எழுப்பின வீடு. எங்க தலைமுறையில ஓவியம் தெரிஞ்ச ஒரே ஆளு இந்தா இருக்காரே… கிருஷ்ணன்… அவரோட தாத்தா மாதன்தான்’’. என்று பக்கத்தில் நின்றிருக்கும் கிருஷ்ணனைக் காட்டிவிட்டு மேலே தொடர்கிறார் பாலசுப்ரமணி.

‘‘கிருஷ்ணன், எனக்கு சித்தப்பா மகன். ஒரு நாள் சி.பி.ராமசாமி ஐயர்  ஃபவுண்டேஷன்லருந்து அதன் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா எங்க ஊருக்கு வந்திருந்தாங்க. ‘வெள்ளரிக்கொம்பை’, ‘தாழைமொக்கை’ போன்ற இடங்கள்ல இருக்குற பாறை ஓவியங்களைப் பாத்தாங்க. அழியப் போற நிலைல இருந்துச்சு ஆதிவாசிகளோட ஓவியக்கலை. ‘இதை இப்படியே விடக்கூடாது. யாராவது கத்துக்க வாங்க’ன்னு எங்களை ஊக்குவிச்சாங்க. தாத்தா சொல்லிக் கொடுத்த பழக்கத்துல கிருஷ்ணன் கொஞ்சம் வரைவாரு. ஆனா, முறையா தெரியாது. இங்கே சென்னைக்கு வந்தோம். சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் எங்களுக்கு ஓவியர் வெங்கடேசனை அறிமுகம் செஞ்சு வச்சுது. அவருதான் எங்களுக்கு பிரஷ் பிடிச்சு எப்படி வரையறதுன்னு சொல்லிக் கொடுத்தாரு. மெல்ல மெல்ல வரைய ஆரம்பிச்சோம். இப்போ நான், கிருஷ்ணன், என் மகள் கல்பனா மூணு பேரும் சேந்து வரைஞ்ச ஓவியங்கள்தான் இங்கே இருக்கறதெல்லாம்…’’.

ஒவ்வொரு ஓவியமும் ஒரு தனி உலகம். குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசுபவை. ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார் பாலசுப்ரமணி. இங்கே சில மாதிரி ஓவியங்களும் அதற்கான விளக்கமும்…

கொவைக்கல்

திணை, சாமை, ராகி என எந்த தானியமுமாக இருக்கட்டும்… காட்டில் விளைந்த பிறகு அப்படியே எடுத்துப் பயன்படுத்திவிட மாட்டார்கள் குறும்பர் இன மக்கள். அதைக் கொண்டு போய் கொவைக்கல் என்கிற இடத்தில் மொத்தமாக வைத்துப் படைப்பார்கள். சாமி கும்பிட்ட பிறகுதான் தானியங்கள் வீட்டுக்குப் போகும்.

கும்பதேவா

‘கும்ப’ என்றால் குடம். வருடம் ஒரு மண் பானையை எடுத்துப் போய் மலை மேல் இருக்கும் தெய்வத்துக்கு வைத்துவிட்டு வருவார்கள். சில இடங்களில் மூன்று குடங்கள் வைக்கப்படும். சில இடங்களில் 7 குடங்கள் இருக்கும். 7 விதமான தானியங்கள் நன்றாக தங்கள் மண்ணில் விளைய வேண்டும் என்பதற்கு இந்த வழிபாடு. 7 நாள் காட்டுக்குள் இருந்து கடும் விரதம் இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாமல், சுள்ளி இலைகளை மட்டும் கட்டிக் கொண்டு விரதம் நடக்கும். ‘மொதலி’ எனப்படுபவர் கிட்டத்தட்ட பூசாரி மாதிரி. புதிதாக பயிர் வைப்பதென்றாலும், களை எடுப்பது என்றாலும், அவர்தான் தொடங்கி வைப்பார்.  தங்களைக் காக்கும் தெய்வமான ‘கும்பதேவா’வின் பெயரை உரக்கச் சொல்லி, காரியங்களுக்கு துணையிருக்க வேண்டுவார் மொதலி.

தேன் எடுத்தல்

‘தேன்’. நினைத்தாலே தித்திக்கும். ஆனால், அதை எடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதிலும் மலைத்தேன் எடுப்பது என்பது சூரத்தனமான வேலை. எப்பேர்ப்பட்ட மலையாக இருந்தாலும், எந்தப் பாறை இடுக்கில் இருந்தாலும் தேனை எடுத்துவிடுவார்கள் குறும்பர் இன மக்கள். ஆனால், அது ஒரு கூட்டு முயற்சி. அது போன்ற தேனெடுக்கும் ஒரு நிகழ்வுதான் இந்த ஓவியம். மலை உச்சியில் ஒரு மரம். அதில் பிணைக்கப்பட்ட கயிற்றேணியை இருவர் பாதுகாப்புக்காக பிடித்துக் கொள்கிறார்கள். கயிறு, மலைப் பாறையில் இறங்க, உச்சியில் ஒருவர் மற்றொரு கயிறை விடுகிறார். கயிற்றில் கூடை. அதில் தேனீக்களை விரட்ட புகை மூட்டம். நூலேணியில் இருவர் தேனெடுக்க ஏறுகிறார்கள்.

திருமணம்

குறும்பர் பழங்குடியினர் வாழ்வில் சுவாரஸ்யமான வைபவம் திருமணம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து 7 பேர் கிளம்பிப் போய் பெண் கேட்பதில் களை கட்ட ஆரம்பிக்கும் திருமண விழா. வரதட்சணை என்கிற பேச்சுக்கு குறும்பர் இன மக்கள் வாழ்வில் இடமில்லை. ஆனால், சீர் உண்டு. அதிலும் ஓர் ஆச்சரியம். இரண்டு சீர். ஒன்று திருமணத்துக்கு… மற்றொன்று மரண நிகழ்வுக்கு! மண மக்களின் மரணத்துக்கும் சேர்த்து திருமணத்தின் போதே சீர் செய்து விடுகிறார்கள். மண மக்களை மேடைக்கு அழைத்து வரும் போது அவர்கள் பாதங்களைத் தரையில் பட விடுவதில்லை. விரிப்புகளை விரித்து அதன் மேல் நடந்து வரச் செய்கிறார்கள். காட்டில் விளையும் ‘பால மரம்’ மேடையில் நடப்படுகிறது. மணமக்கள் அமர ஒரு பிரத்தியேக திண்ணை தயாராகிறது. (அதற்கு அவர்கள் மொழியில் ‘அக்க திண்ணெ மதுவெ’ என்று பெயர்). மண்ணில் குழைத்துச் செய்யப்பட்ட திண்ணை. அதில் மணமக்கள் அமர, திருமணம் நடக்கிறது. மாங்கல்யமாக கருகமணி கோர்த்த காசுமாலை மணமகளுக்கு அணிவிக்கப்படுகிறது.

கொவை மனை

காட்டில் வெள்ளாமை விளைந்த பிறகு தானியங்கள் பங்கு போடும் இடம் இது. இந்த இடத்தில், இந்த மனையின் முன்புதான் தானியங்கள் பிரிக்கப்படும். முக்கியமாக மூன்று பங்காகப் பிரிக்கப்படும். முதல் பங்கு ‘மொதலி பங்கு’. ஊர்ப் பெரிய கட்டுக்கு, எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர்களுக்கு என்றும் வைத்துக் கொள்ளலாம். அடுத்தது மண்ணுக்காரனுக்கு. தானியம் விளைந்த மண்ணுக்குச் சொந்தக்காரனுக்கான பங்கு. அடுத்தது ‘சாதிக்காரன் பங்கு’. தானியம் விளைய உதவிய உழைப்பாளர்களுக்கானது.

கெதேவா

காட்டு தெய்வத்திடம் வேண்டுதல் நடக்கிறது. ‘பயிர்களை எலி, பூச்சியிடம் இருந்து காப்பாற்று தெய்வமே! விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு உதவு சாமி!’ என்ற கோரிக்கையோடு தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஒரு மரத்தைச் சுற்றிச் சிறு குழி வெட்டியிருக்க, அதன் நடுவே இருக்கும் தெய்வத்துக்கு 7 குடம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அந்தத் தண்ணீரிலேயே குழி நிரம்பி வழிந்துவிட்டால் அந்த வருடம் விளைச்சல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமோகமாக இருக்கும் என்று அர்த்தமாம்.

திருவிழா

ஊர்த் திருவிழாவை அமர்க்களமாகக் கொண்டாடுவது குறும்பர் இன மக்களின் வழக்கம். ஆட்டம், பாட்டு எல்லாம் தூள் பறக்கும். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கூட்டாகச் சேர்ந்து நடனமாடுவார்கள்.

‘‘கிட்டத்தட்ட அழிஞ்சுபோற நிலைமல இருந்த எங்களோட ஓவியக்கலையை மீட்டெடுக்க சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் உதவியிருக்கு. அதோட எங்களோட பழக்க வழக்கம், பண்பாடு எல்லாத்தையும் இதன் மூலமா எங்க அடுத்த தலைமுறையும் தெரிஞ்சிக்கவும் வழி பிறந்திருக்கு. இந்த ஓவியங்கள் மூலமா எங்களுக்கு வருமானம் கிடைக்கவும் செய்யுது’’ என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் கிருஷ்ணன்.

வருமானம் என்று அவர் சொன்னாலும், மிகப் பெரிய ஓவியங்களைத் தவிர மற்ற எல்லாமுமே 200லிருந்து 900 ரூபாய்க்குள்தான் விலை. எங்கோ மலை கிராமத்திலிருந்து வந்து தங்கள் பாரம்பரியத்தை ஓவியங்களாக வடிக்கும் அந்த மூன்று பேரையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

ஓவியங்களில் உயிர்ப்போடு திகழ்வது மரங்களும் செடி, கொடிகளும். சின்னச் சின்ன கோடுகளில் அற்புதமாக இயற்கையை வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விஷயமும் உண்டு. இவற்றில் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் முகங்கள் இல்லை. பழமையையும் இயற்கையையும் போற்றி, இன்று வரை பாதுகாத்து வரும் எத்தனையோ மலைவாழ் மக்களைப் போலவே!

– பாலு சத்யா

படங்கள்: ஆர்.கோபால்

நன்றி: குங்குமம் தோழி

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!