குறும்பர்களின் மாவீரன் ஆண்மையூர் ஆம்பூர் ஆன விதம்...!!!!!!

குறும்பர்களின் மாவீரன் ஆண்மையூர் ஆம்பூர் ஆன விதம்...!!!!!!

சமயத்தில் உதவி அருள்வாள் அன்னை சமயவல்லி

ஆம்பூர்

பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் பழமையான பெயர் ஆமையூர் என்கிற ஆமூர் ஆகும். வடமொழியில் கூர்மபுரி என்றழைக்கப்பட்டது.  இவ்வூரில் குறும்பர் என்னும் பண்டைக்கால வீரமிக்க குலம் வாழ்ந்து வந்தது. ஆம்பூரில் இவர்கள் கட்டிய கோட்டை பகைவர்கள் நெருங்க அஞ்சும் அளவிற்கு  வலிமையானது. இன்று கோட்டையின் எஞ்சிய சிறுபகுதிகளை மட்டுமே காண முடிகிறது. குறும்பர் இன வீரன் ஒருவனின் நடுகல் காணப்படுகின்றது. இவன் மீது அம்புகள்  சரமாரியாக வீசப்பட்டு அவன் மார்பினைத் துளைத்தபொழுதும், சிறிதும் அயராமல் அவற்றைத் தாங்கிக் கொண்டு எதிரிகள் சிலரைத் தாக்கிய வண்ணமே வீர  சொர்க்கம் அடைந்துள்ளதால் ‘‘ஆண்மையூர்’’ என்றும் அழைக்கப்பட்டு ஆம்பூர் என்றானதாகவும் கூறுவர். 

‘கோயில் சிறக்க ஊர் சிறக்கும்’ என்ற முதுமொழிப்படி ஆம்பூரில் எழுந்தருளி இருக்கும் சமயவல்லி சமேத நாகநாதர் திருவருளால் ஊர் பெருஞ்சிறப்பு  பெற்றுள்ளது. இந்த பிரபஞ்சத்திற்கே இரண்டாவது கடவுளாக தானே இருக்க வேண்டும் என மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் எண்ணினார்கள். அதற்காக ஈசனை  நோக்கி தவமிருக்க எண்ணிய மகாவிஷ்ணு, அதற்கான சரியான தலம் ஆம்பூர்தான் என்பதை கண்டு கொண்டார். நினைத்தபோதெல்லாம் பூலோகம் வந்து  ஆம்பூர் நாகநாதரின் அருளை வேண்டி கடும் தவம் புரிந்தார். 

பிரம்மனே இரண்டாவது கடவுளாக வேண்டுமென்று எண்ணிய சரஸ்வதிதேவி, பாலாறாகப் பெருகி மகாவிஷ்ணுவின் தவத்தைக் கலைத்தாள். இதனால் தவம்  கலைந்த மகாவிஷ்ணு திருவண்ணாமலையாரிடம் முறையிட, இதற்கோர் முடிவு கட்ட எண்ணிய அண்ணாமலையார், தனது முடியையோ, அடியையோ, யார்  முதலில் கண்டு வருகின்றார்களோ அவரே இரண்டாவது கடவுளாக இருக்கத் தகுதியானவர் என்ற போட்டியை அறிவித்தார். திருவடியினை தரிசிக்க பன்றி  ரூபத்தில் திருமாலும், திருமுடியினை தரிசிக்க அன்ன ரூபத்தில் பிரம்மனும் புறப்பட்டனர். 

திருமுடியினைக் கண்டதாக பிரம்மன் பொய் உரைத்ததோடு, மகாவிஷ்ணுவின் தவத்தை சரஸ்வதி மூலமாக ஏழுமுறை கலைத்ததால், பிரம்மன் ஏழு  தலங்களில் ஏழு பிறவி எடுத்து அதன்பிறகு மீண்டும் படைக்கும் தொழிலை செய்யலாம் என்று ஈசன் அருளினார். அதன்படியே, பூலோகத்தில் பிரம்மன் தீர்த்தகிரி,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, விரிஞ்சிபுரம், திருப்பத்தூர், ஆம்பூர் என ஏழு தலங்களில் ஏழு பிறவிகள் எடுத்தார். ஏழாவது பிறவியில் ஆம்பூரில் அந்தணர்  குலத்தில் பிறந்தார். 

நாகநாதர் திருக்கோயிலில் சிவாச்சாரியராக இருந்த அவரின் தகப்பனாருக்கு உடல்நலம் சரியில்லாதபோது, பிரம்மன் பூஜை செய்யச் சென்றார். அபிஷேகத்தை  முடித்து வஸ்திரம் சாத்தி விட்டு பூமாலை அணிவிக்க எத்தனித்த சிறுவனுக்கு உதவ எண்ணி மாலை இட தோதாக, சுவாமியே தன் திருமுடியைச் சற்று  சாய்த்தார். அந்தக் கணமே பிரம்மன், அண்ணாமலையாரின் திருமுடியைத் தரிசிக்கும் பேறு பெற்றவராகி சுயவடிவம் பெற்று நாகநாதரின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தெழுந்தார். பிறகு மீண்டும் தன்னுடைய உலகிற்குச் சென்று படைக்கும் தொழிலைத் தொடர்ந்தார். 

இறைவன், பிரம்மனுக்கு அருளிய ஏழு பிறவிகளே உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. ஏழாவது பிறவியில், மற்ற ஆறு பிறவிகளின்  பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனடி சேர முடியும். பிரம்மன் ஆறு பிறவியிலேயும் சிவசிந்தனையோடு கழித்ததால் ஏழாவது பிறவியாக ஆண்டவனுக்குத்  தொண்டு செய்யும் அந்தணர் குலத்தில் பிறந்து இறைவனின் திருமுடியினைத் தரிசிக்க முடிந்தது. பிரம்மன், ஆம்பூரில் அண்ணாமலையாரின் திருமுடியை  நாகநாதரின் வடிவில் தரிசித்த நாளை இங்கு பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடுகின்றனர். 

பங்குனி உத்திரத்தின்போது இந்த பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கோயில், ஒன்றே கால் ஏக்கர் நிலப் பரப்பில் முழுக்க முழுக்க  அக்னி பாகத்தில் திருவண்ணாமலை சிவாலயத்திற்கு நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. இங்கு செய்யும் பூஜைகள் திருவண்ணாமலைக்கு ஒப்பானது. இதனை  பிரம்மன் திருமுடி கண்ட புராணம் உறுதிப்படுத்துகிறது. முன்பு இத்திருக்கோயில் ஆற்றின் கரையோரமாக அமைந்திருந்ததால் பள்ளத்தில் கோயில் அமைந்துள்ளது. ஊர் உயர்ந்து விட்டது. சில படிகளில் இறங்கி, மூன்று நிலை ராஜ கோபுரத்தை அடைய வேண்டும்.  

ராஜகோபுரத்தின் நிலைக்காலில் வல்லப கணபதி தன் வாகனத்தோடு தரிசனம் அருள்கிறார். பிரதோஷ நந்தி ஒன்பது துளைகள் வழியாக இறைவனை  இமைக்காமல் பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார். பிரதட்சணமாக வலம் வரும்போது ஆரம்பத்திலேயே நவகிரக சந்நதியை சந்திக்கலாம்.  நவகிரகங்கள் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர். சனிபகவானின் வாகனமான காகம் இடதுபுறம் திரும்பியிருக்கிறது. இங்கு சனிபகவானுக்கென்று தனிச் சந்நதி  கிடையாது. மொங்கு சனி நடப்பவர்கள் இவரை வழிபட்டால் கொஞ்சம் உக்கிரம் குறையும். 

நற்பலன்கள் கிட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மூலவர் மற்றும் பிரதான தெய்வங்கள் ஒரே திருக்கோயிலுக்குள் கோயில் கொண்டு அருளுகிறார்கள். இத்திருக்கோயிலின் பிரதான நாயகனான நாகநாதர் சந்நதிக்கு முன்பு காவலிருக்கும் துவார பாலகர்கள் இருவரின் காதுகளில் நாக சர்ப்பம் காதணியாகத்  தொங்குகின்றது. கருவறையில் திருக்காட்சியருளும் நாகநாதர், நாகவடிவானவர். தினமும் பசு ஒன்று தானாக பாம்புப் புற்று ஒன்றின் மேல் பால் சுரக்கக் கண்டு  ஊரார் அதிசயித்தனர். வியந்து போன அவர்கள் இதன் காரணத்தை அறிய புற்றினை இடித்தனர். 

அப்போது நாகநாதரின் திருமுடியில் காயம் இருந்ததைக் கண்டனர். ஈசனின் திருவுளப்படி அங்கேயே கோயில் அமைத்தனர். துவாபர யுகத்தில் சதுர  ஆவுடையாருடன் திருமேனி எழுந்தருளிவிக்கப்பட்டது. இத்தலத்து அம்பாள் இறைவனைப் போலவே கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கின்றாள். ஆயிரம்  தாமரை மலர் மீது நின்றவாறு அழகிய கோலம் காட்டியருளுகின்றாள். சமயத்தில் உதவுபவளாக இருப்பதால் சமயவல்லி என்று அன்பொழுக  அழைக்கப்படுகின்றாள். சுவாமியின் கருவறையின் புற திருச்சுற்று முழுவதிலும் மலர் தூவியதுபோல அழகான கல்வெட்டு தகவல்களைக் காணலாம். 

தென்பக்கத்தில் பச்சைக் கல்லில் வடிவமைக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி. இவரின் மூர்த்தத்திற்கு மேலே ஆஞ்சநேயர், இத்தலத்து இறைவன் நாகநாதரை வழிபடுவது  போன்ற சிற்பங்களைக் காணலாம். இத்திருக்கோயில் இறைவனை தவமிருந்து வழிபட்ட பின்பே ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றலைப் பெற்றார்  என்பதனை இந்த சிற்பங்களும், இத்திருக்கோயிலிலிருந்து அரை கி.மீ. தூரத்திலிருக்கும் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், இந்த இறைவனை தொழுத வண்ணம்  விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி அளிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். 

கோஷ்டத்தில் நிருத்திய கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர். பைரவர் சந்நதியில் முதலும் கடைசியுமான  அசிதாங்க பைரவரும், கால பைரவரும் திருநிலை கொண்டுள்ளனர். குறும்பர் இனத்தவர்களின் குலதெய்வமாகிய காளத்தீஸ்வரர்-கற்பகாம்பா சந்நதியின்  முன்மண்டபம் யாவுமே வித்தியாசமான சிவப்புக் கல்லில் அமைந்திருப்பது மற்றோர் சிறப்பம்சம். அடுத்ததாக நால்வர் சந்நதி, பால தண்டாயுதபாணியின் சந்நதி.  எங்குமே காணவியலாத திருக்கோலமாக முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் இருந்தபொழுதும் பாலதண்டபாணி என்று அழைக்கப்படுகிறார். 

இவர்மீது அருணகிரிநாதர் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். ஆம்பூர் முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் எழுதிய பாடல்கள் கிடைக்கவில்லை என்பது  இப்பகுதி பக்தர்களின் ஏக்கம். இத்தலத்திற்கு வந்து வழிபட களத்திர, காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தி அடைகின்றன. நாகம் கக்கிய மாணிக்கம் பிரகாசமாக  ஒளியைப் பரப்புவதுபோல் நாகநாதரின் திருக்கோயில் தென்னகத்தில் அருள் ஒளியை வாரி இறைத்துக்கொண்டே இருக்கின்றது. ஆலயத் தொடர்புக்கு:  9789676334. வட ஆற்காடு மாவட்டம் வேலூரி லிருந்து 48 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 

- இறைவி

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!