நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்...

 நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்...

குறும்பர்களின் கோட்டை இருந்த இடமாகச் சுவடி குறிப்பிடும் ஊர்களில் நெறும்பூர் ஒன்றாகும் . அது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது . பாலாற்றின் கரை ஓரத்தில் உள்ளது . 

ஐம்பது வயதுடைய திருமதி . மைதிலி இராசகோபாலாச்சாரியார் உதவியுடன் அங்கிருந்த கல்வெட்டுடன் கூடிய நீலமாணிக்கப் பெருமாள் கோவில் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ளப்பட்டன . கமலவல்லித் தாயாரும் நீலமாணிக்கப் பெருமாளும் எழுந்தருளியுள்ள அக்கோவில் குறும்பர்கள் வைணவத்திற்கு மாற்றப்பட்ட விவரத்தோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது . 


கிராம அலுவலர் அரங்கநாதனும் அவருடைய துணைவியாரும் அவ்வூரைப் பற்றிய மற்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் , காணவும் உதவினார்கள் . அவர்கள் வழிபெற்ற விவரங்கள் பின்வருமாறு...


 நெறும்பூரில் இப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் உள்ளனர் . அவர்களுள் ஆதிதிராவிடர்கள் நூறு வீடுகளிலும் , பார்ப்பனர்கள் ஐந்து வீடுகளிலும் , ரெட்டியார்கள் இருபது வீடுகளிலும் , வன்னியர்கள் ஐம்பது வீடுகளிலும் , முதலியார்கள் ஐந்து வீடுகளிலும் , யாதவர்கள் நாற்பது வீடுகளிலும் , இருளர்கள் அல்லது வில்லியர்கள் எனப்படுவோர் மூன்று வீடுகளிலும் , முஸ்லிம்கள் இரண்டு வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் . 

நெறும்பூர் மேலம்மையூர் ஜமீனுக்கும் குணாம்பேட்டை ஜமீனுக்கு மான தகராறில் இருந்தது . பின்னர் நீதிமன்றம் வரை சென்று குணாம்பேட்டை ஜமீனுக்கு முழுவதும் உரியதாகி விட்டது . பின்னர் மேலம்மையூர் ஜமீனிடமிருந்து பெற்ற பகுதிகளைக் குணாம்பேட்டை ஜமீன் பி.வி. கஜபதிராஜா எனும் விஜயநகர அரசர் பரம்பரை யினிடத்தில் விற்று விட்டாராம் . இப்போதும் அவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர் . அவ்வூரின் முக்கியத் தொழில் விவசாயமாகும்...

அவ்வூரில் உள்ள திருவாலீசுவரர் சிவன்கோவில் பழமையானதாகும் . அவ்வூரில் உள்ள சிவன்கோவிலுக்கும் வைணவக் கோயிலுக்கும் சேர்த்துப் பொதுவாக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . சிவன் கோவிலின் கருவறைச் சுவரின் வெளிப்பக்கத்தில் தென்பக்கம் நின்ற கோலத்தில் விநாயகரும் மேற்குப்பக்கத்தில் திருமாலும் வடக்குப் பக்கத்தில் நான்முகனும் துர்க்கையம்மனும் இடம் பெற்றுள்ளனர் . சிவன் கோவிலில் உள்ள பெருமாள் சிலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும் . கோயிலைச் சுற்றி வடக்குப்பக்கம் தவிர மற்ற பக்கங்களில் கல்வெட்டுகள் உள்ளன . கருவறை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது . 

இனி , குறும்பர்களுடன் தொடர்புடையதாக அவ்வூரில் கண்டறிந்தவையும் சுவடி குறிப்பிடும் செய்திகளின் இன்றைய நினைவுகளும் பின்வருமாறு :

 அங்கு யாதவர்க்கென்று தனியாக ஒரு தெரு உள்ளது . ' புறங்காலைப் பிடித்தவன் ' என்பது அவர்களைப் பற்றிய பழமொழியாக அங்கு வழங்கப்பட்டு வருகிறது . ' அட்டவாக்கம் நெறும்பூர் ' என்று எழுதப் பட்ட பெரிய கல் ஒன்றும் எழுதப்படாத தூண் ஒன்றும் அத்தெருவில் கவனிக்கப்படாமல் புதையுண்டு நிற்கின்றன . 

குறும்பர்களின் கோட்டையாக இருந்த இடம் இப்போது வெற்று நிலமாக உள்ளது . அங்குப் பழங்காலத்தைச் சேர்ந்த கற்களும் ஓடுகளும்  வரப்புகளில் குவிந்து கிடக்கின்றன . குறும்பரின் கோட்டைப் பகுதியாகக் கூறப்படும் இடத்தைச் சுற்றிலும் உள்ள அகழி , அகழிப்பள்ளம் என்றும் அகழிக்குட்டை என்றும் அழைக்கப்படுகிறது . அருகில் உள்ள பகுதிகள் வயல்களாக உள்ளன . 

நெறும்பூர் ஜமீனில் மேலாளராக இருக்கும் 52 வயதுடைய இராசன் என்பவர் கோட்டை மேட்டிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இருக்கும் நிலத்தைச் சரிசெய்யும்போது கிடைக்க ஐந்து முகம் கொண்ட அழகிய , பழைய மண் விளக்கு , திருவைக்கல் , செங்கல் , உடைந்து போன மண்ணாலான குதிரையின் கால் ஆகியவற்றை வைத்திருக்கிறார் . 

மண்விளக்கு 18 அங்குல விட்டத்திற்கு வட்டவடிவில் வழவழ வென்று சிவப்பு வண்ணத்தில் உள்ளது . திருவைக்கல்லின் ஒருபகுதி மட்டும் கிடைத்துள்ளது . செங்கற்கள் மிகப் பெரியனவாகவும் அதிக எடையுடனும் உள்ளன . ' சங்க காலத்திலும் அதற்குப் பிந்திய பேரை பல்லவர்,சோழர் காலத்திலும் தமிழகத்தில் இத்தகைய நீளமும் எழ்ந்து அகலமும் கொண்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பது அகழ்வாராய்ச்சி காட்டும் உண்மையாகும் . இவற்றைப் போன்ற செங்கற்கள் உறையூர் , காவிரிப்பூம்பட்டினம் , அரிக்கமேடு , நத்தமேடு , பார்த்து சோழ மாளிகை , காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன .  நெறும்பூரில் கிடைத்துள்ள செங்கற்கள் மேலே குறிப்பிட்டுள்ள செங்கற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தகுதியை உடையனவாகும் . சுவடியும் பூர்வம் கண்ட கற்கள் என்று அவற்றைக் குறிப்பிடுகின்றது . 

குறும்பர்களின் கோயில் இருந்த இடமாகச் சுவடியில் கூறப்பட்டுள்ள இடம் . இப்போதும் கோரி என்றழைக்கப்படுகிறது . ஆனால் அது விவசாய நிலமாக மாறியுள்ளது . அவ்வூரைச் சேர்ந்த ' ஒட்டங்காச்சிக்களம் ' என்று அழைக்கப்படும் பகுதியில் பழைய காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் நிறையக் குவிந்து கிடக்கின்றன . இங்குள்ள மலட்டாற்றங்கரையில் ஓடு , செங்கல் , முதுமக்கள் தாழியின் சிதைந்த பகுதிகள் கிடக்கின்றன . முதுமக்கள் தாழியை அவ்வூர் மக்கள் குறும்பர் உறைகல் " என்றழைக்கின்றனர் . சிலர் , வீடுகளில் இத்தாழிகளை வைத்திருக்கிறார்கள் . 

நெறும்பூரில் குறும்பரைக் கொன்ற இடம் என்ற பெயருடன் ஒரு பகுதி உள்ளது . 
யாதவர் இனத்தைச் சேர்ந்த வேதாச்சலம் பிள்ளையின் மகன் கன்னியப்பன் என்பவர் அந்த இடம்பற்றி 
' குறும்பரினத்தில் ஒருவன் இறந்துபோன அன்று ஏற்பட்ட தகராறில் குறும்பர்கள் பலர் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் , இறந்தவர்களைப் பக்கத்திலிருந்த கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டார்கள் என்றும் அதனால் அந்த இடத்திற்கு குறும்பரைக் கொன்ற இடம் என்று பெயர் வந்ததாகவும் தெரிவித்தார் .

 குறும்பரைப் பற்றியுள்ள மூன்று சுவடிகளில் அம்பட்டரால் குறும்பர் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ' சொல்லப்பட்டுள்ளது . 

வெள்ளாள முதலியார்களுக்கும் குறும்பர்களுக்கும் நடந்த தகராறுகள் சமாதானமடைந்தபோது , அதை ஏற்றுக்கொள்ளாத குறும்பரில் சிலர் வெளியேறி விட்டதாகவும் , ஏற்றுக்கொண்டவர்கள் வெள்ளாள முதலியாருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றன. குறும்பர் களின் ஒருவன் இறந்தபோது , இழவுக்கு வந்திருந்த சேர்ந்து வாழாத குறும்பர்களை , அவர்கள் மரபுப்படி இழவுக்கு வந்தவர்களுக்குத் தலையை மொட்டை அடிக்கும்போது , அம்பட்டர்கள் வெள்ளாள முதலியார்களின் ஆதரவால் அவர்களின் கழுத்தை அறுத்து விட்டனர் . 
அந்த இடம் குறும்பரைக் கொன்ற இடமாக இன்றைக்கும் அழைக்கப் பட்டு வருகிறது என்றும் கன்னியப்பன் தெரிவித்தார் . 

அந்த இடத்தில் இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் கழுத்தறுக்கப்படும் காட்சியல் அமைந்த நடுகல் ஒன்று இருந்ததாகவும் சென்னையிலிருந்து வந்தவர்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

கழுத்தில்லாத ஒரு கற்சிலை

 ' மொட்டப் பார்ப்பாத்தியம்மா கல் ' என்ற பெயருடன் அங்குள்ளது..


குறும்பர்கள் நெறும்பூர் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு புகழுடன் வாழ்ந்தார்கள் .

 அப்போது முதலியார் வேளாளர் ஆகிய வகுப்பைச் சார்ந்தவர் களைத் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று குறும்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள் . அவர்கள் கீழ்ப்படிய மறுத்தனர் . அதனால் குறும்பர்கள் அவர்களுக்குத் தொல்லை தந்தனர் . அப்படியும் அவர்கள் குறும்பர்களை வணங்க மறுக்கவே , தெருவிலும் மூச்சந்திகளிலும் வெற்றிலைத் தோட்டங்களிலும் மற்ற இடங் களிலும் திட்டிவாசல் போன்று சிறிய , உயரம் குறைவாக உள்ள வழிகளை அமைத்து அதற்கு முன்பாகக் குறும்பர்கள் உட்கார்ந்து கொண்டனர் . வழியில் போகிறவர்கள் அனைவரும் அந்தக் குறுகிய வாசலைத் தலைகுனிந்து கடந்து செல்வதன் வழி குறும்பர்களுக்குக் தலைகுனிந்து வணக்கம் செலுத்தினர் . ஆனால் இந்த ஏற்பாட்டை யும் முதலியார் , வேளாளர் வகுப்பினர் ஏற்கவில்லை . 

அமயன் என்பவன் வழி சமாதானம் செய்து பார்த்தார்கள் . அதன்படி ஒரு குறிப்பிட்ட குறும்பச் சாதியார் வேளாளருடன் சேர்த்து கொண்டார்கள் . 

வயதான குறும்பனின் இழவுச் சடங்கின்போது முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு எழுந்தது . தலையை மொட்டை அடித்துக் கழுத்துப்பக்கம் வருகிறபோது குரல்வளையை அறுத்துக் இது நெரும்பூரில் நடந்தது . கொண்டார்கள் . பெண்கள் குறும்பருடன் இறந்து போனார்கள் . 

இது நெறும்பூரில் நடந்தது

நெறும்பூரில் குறும்பர்களின் கோட்டை இடிந்து விழுந்து மண் மேடாய்க் கிடக்கிறது . அதனைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள் . குறும்பர்களால் கட்டப்பட்ட கோரிகள் பாழடைந்து கிடக்கின்றன . இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் கற்கள் மிகப்பழமை யான காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன .

நன்றி திரு ம . இராசேந்திரன்

Comments

  1. Blackjack - Casino - WebMoney.com
    Blackjack is the 문경 출장안마 favorite card game in the casino 제주 출장샵 game. This game involves the 동해 출장안마 dealer placing a 밀양 출장마사지 bet on the dealer to 천안 출장안마 win an instant prize.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!