குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்


#குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்
____________________________________
____________________________________

குறும்பர் பழங்குடி மக்களின் முக்கியக் கலை சேவையாட்டம் ஆகும் .

சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும் .

தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம்.

கைகளில் உண்மையான 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும் . பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து வளர்த்து எடுத்திருக்கின்றனர் . ஆனால் ஒரு
பழங்குடியின மக்களின் கலை
காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும்
பழங்குடியின மக்கள் தங்களின் கலை  பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுக்காத்து வந்திருக்கின்றனர் .

தங்களது தொல்பெரும் கலையைச்
சிற்பங்கள் மூலம் கோயிலில் , வடித்து வைத்து அதனை வணங்கிப் பாதுகாத்திருக்கின்றனர் . இசைக்கருவிகள் முழங்க , சேவையாட்டம் ஆடுபவர்களின் சிற்பங்கள் தற்பொழுதும் காணக்கிடக்கின்றன .
இச்சேவையாட்டம் என்பது திருவிழாக்காலங்களில் இறைவன் முன்பு ஆடப்படுவது . இவ்வாட்டத்திற்கான இசைக்கருவிகளும் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன . மற்ற காலங்களில் அவை வாசிக்கப்படுவது இல்லை . எனவே சேவையாட்டமும் அதற்கான இசைக்கருவிகளும் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன .
சேவையாட்டத்திற்கு முக்கியமான இசைக்கருவி(மகுடம்)
தப்பட்டை ஆகும் . இது வட்ட வடிவில் உள்ள தோல்கருவி இதை குறும்பர் பழங்குடிமக்களே தயாரிக்கின்றனர் .
தப்பட்டையின் சட்டத்தை மூன்று பால் மரங்களை இணைத்து வட்டவடிவில் தயார் செய்கின்றனர் . இத்தப்பட்டையின் மேற்புறம் ஆட்டின் தோலால் கட்டப்பட்டிருக்கிறது .  

இந்தத் தப்பட்டையைச் செய்யும் தப்பட்டைக்காரர் விரதம்
இருந்து தன் முன்னோர்களை வேண்டி இந்தத் தப்பட்டையைச் செய்வார் . கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மட்டுமே இத்தப்பட்டையை வாசிக்கின்ற காரணத்தால் இத்தப்பட்டை மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது . முதலில் தப்பட்டைக்குப் பூசை செய்து வழிபாடு செய்த பின்னரே அதனை எடுத்து வாசிக்கின்றனர் . குறும்பர் பழங்குடி மக்களின் விழாக்களில் தப்பட்டைக்குப் பூசை செய்வது என்பது முக்கியமான சடங்காகும் . தப்பட்டையை அடிப்பவர்கள் தப்பட்டைகாரர்கள் என்று குறும்பர் பழங்குடி மக்கள் அழைப்பார்கள் . தப்பட்டைக்காரர்கள் இவர்கள் தான் தப்பட்டை என்னும் இசைக்கருவியைத் தயாரிக்க வேண்டும் . விரதம் இருந்து தயாரிக்க வேண்டும் . தப்பட்டைக்குத் தேவையான மரம் வெட்டுவதிலும் சில விதிமுறைகள் உண்டு . தேவலேரி மரம் , பூவரசு மரம் , வேங்கை மரம் ஆகிய மூன்று மரங்களும் புற்றின் மேல் வளர்ந்து இருக்க வேண்டும் . மூன்று பௌர்ணமி , மூன்று அமாவாசைகள் , மரத்திற்கு தப்பட்டைக்காரர்கள் பூசை செய்ய வேண்டும் . பின்பு மரத்தை வெட்டிப் பதப்படுத்தி மூன்று துண்டுகளாகச் செய்து மூன்றையும் சேர்த்து அலிக , திம்மை போன்றவைகளாகச் செய்கின்றனர் . பின்பு தப்பட்டையை நந்தியானுடையக் கோமயத்தில் நனைத்து மஞ்சள் தடவி வீரபத்திரர் கோயிலில் வைத்துப் பூசை செய்து பின் எடுத்து அடிப்பார்கள் . இதை அடிக்கும் பொழுது வெறும் கைகளால் தான் அடிக்க வேண்டும் . அருள்மிகு வீரபத்திரருக்குப் பூசை செய்யும் பொழுது தப்பட்டைக்கும் தப்பட்டைக்காரர்களுக்கும் பூசை செய்ய வேண்டும் . அருள்மிகு வீரபத்திரருக்கு சேவை செய்வதும் , தொண்டு செய்வதும் இவர்களுடைய குலத்தொழில் ஆகும் . ஆகவே கோயில்களில் பூசை செய்யும் பொழுது குறும்பர் சமுதாய மக்கள் தப்பட்டைக்காரர்களை முதன்மையாக வைத்து இன்றும் மரியாதை செய்யும் வழக்கம் செய்கின்றார்கள் .

சேவையாட்டம் ஆடுபவர்கள்  அனைவரும் ஒரே
மாதிரியான உடை  அணிவர் . வெள்ளை வேட்டி அணிந்து
கால்களில் சலங்கை கட்டி கையில் 3 அடி வாள் , கேடயம் , துண்டு ஆகியவற்றை வைத்துக் கொண்டு , தலையில் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு தோற்றம் அளிப்பர் .

சேவையாட்டம் ஓர் இரவு முழுவதும் ஆடும் ஆட்டமாகும் . ஓர் இரவு முழுவதும் கண்விழித்து ஆண்கள் இவ்வாட்டத்தினை ஆட பெண்கள் இவ்வாட்டத்திற்கான பாடல்களை இரவு முழுவதும் பாடுவர் . இவ்வாட்டத்தினைக் கற்றுக்கொள்ளத் தொடர்ந்து 60 நாட்கள் ஆகும் என்பர் . தினமும் 3 முதல் 4 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் . பயிற்சி முறையாக முடிவடைந்த பிறகு அரங்கேற்றம் நடைபெறும் . அதன்பின்னரே உற்சவ மூர்த்தியின் முன்பு ஆடமுடியும் . இவ்விதிமுறைகள் இன்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றன .

நடனத்தின்பொழுது நடனமாடுபவர்கள் உற்சவரையும் , தப்பட்டை அடிப்பவர்களையும் வணங்கிய பிறகு இசைக்கேற்ப ஆடுவர் . இந்த நடனம் ஆடும்பொழுது ஆடுபவர்களின் கால்களும் முழுமையாக இயங்குவதால் உடலுக்கு நல்ல வலிமையும் , நரம்புகளுக்குச் சக்தியும் , கைகளும் , புத்துணர்ச்சியும் கிடைக்கின்றன .

இச்சேவையாட்டத்தில் 12 ஆதிகள் உள்ளன . அவை பின்வருமாறு

1. பூஜைகத்தி

2. குனாகத்தி

3. கரக்கத்தி

4. நட்டுவதகத்தி

5. சிந்தகத்தி

6. நிவலுகத்தி

7. சாதனகத்தி

8. மயிலுகத்தி

9. உலிவாசம்

10. தும்பராகத்தி

11. நடாகத்தி

12. பேட்டிகத்தி

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!