குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..

குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..

 உண்டல பத்மன்னா கதை:
------------------------------------------------

 தொடக்க காலத்தில் காபுகளும் குறும்பர்களும் ஒன்றாக இருந்தனர் . இவர்களுடைய மூதாதையர்கள் மாசிரெட்டியும் நீலம்மாவும் கிழக்கு மலைப்பகுதியில் விறகு வெட்டி அவற்றை விற்று வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு ஆறுமகன்கள் பிறந்தனர் . இவர்களுடைய ஏழ்மையைக் கண்டு , சிவபெருமான் ஜங்கமனாக உருவெடுத்துப் பிச்சைக்காரனைப் போன்று வந்து நீலம்மாவிடம் விபூதியைக் கொடுத்தார் . உனக்குப் பிறக்கும் மற்றொரு குழந்தையால் செல்வாக்காய் இருப்பாய் என்று வரம் அளிக்கிறார் . அதன்படி 
ஏழாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது . அக்குழத்தைக்கு உண்டல பத்மன்னா என்று பெயரிடுகின்றனர் . உண்டல் பத்மன்னா பிறந்த பிறகு விவசாயம் பெருகியது . வாழ்க்கை உண்டல செழிப்பாக மாறியது . யாதொரு வேலையும் செய்யாமல் இருந்ததைக் கண்டு அவன் சகோதரர்கள் அவன் மேல் வெறுப்பு உண்டாகி அவனைக் கொல்லவதற்குத் திட்டம் தீட்டினர் . புற்றிருக்கும் முட்புதருக்கு பத்மன்னாவைத் தீ வைக்கத் தூண்டினார் . இதனால் வெப்பம் தாங்காமல் புற்றிலிருக்கும் நாகம் வெளியே வந்து பத்மன்னாவைக் கடிக்கும் ; அப்பொழுது அவன் இறந்துவிடுவான் என்று எண்ணினர் .

 அவர்கள் கூறியது போலவே பத்மன்னாவும் முட்புதருக்கு நெருப்பு வைக்க , புற்றிலிருந்து பாம்பிற்குப் பதில் ஈசனருளால் குறும்ப ஆடுகள் தோன்றின . புற்றிலிருந்து ஆடுகள் வருவதைக் கண்டு பத்மன்னா அஞ்சுவதைக் கண்ட ஈசன் , அவர் முன்தோன்றி இவற்றைக்கண்டு அஞ்சாதே . இவை உனக்காக உருவாக்கப்பட்ட ஆடுகள் . இந்த ஆடுகளிலிருந்து பால்கரந்து சூடாக்கி நெய்யைத் தயாரித்து அருகில் இருக்கும் நகருக்குச் சென்று விற்று வளமாக வாழ்வாயாக என்று கூறினார் . சிவபெருமான் கூறியதுபோலவே பத்மன்னா வாழ்க்கையைத் தொடங்கினார் . 

நாள்தோறும் நகரில் நெய் விற்று வரும்பொழுது அந்நகரில் இராட்சசர்கள் ஒரு பிராமணப் பெண்ணை அடைக்கலமாக வைத்திருப்பதை அறிந்து அப்பெண்ணைக் காப்பாற்றி மணம் செய்து கொண்டார் . பத்மன்னாவிற்கு இது இரண்டாவது திருமணம் . ஏற்கெனவே தன் குலத்தில் ஒரு பெண்ணை மணம் செய்திருந்தார் . மனைவிகள் இருவருக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர் . அவர்களில் தன் இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்குப் பிறந்த குழந்தைக்கு நூல் கங்கணம் என்னும் அத்திக் கங்கணமும் பிராமணப் பெண்ணிற்குப் பிறந்த குழந்தைக்கு உண்ண கங்கணமும் கட்டினான் .

 இதனால் தன் குலப்பெண்ணிற்குப் பிறந்த மகன் உயர்குலத்தைச் சார்ந்தவன் என்றும் , பிராமணப்பெண்ணிற்குப் பிறந்த மகன் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்றும் கருதப்பட்டனர் . இதனால் குறும்பர்
 பழங்குடியில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன .

 இவ்விரண்டு பிரிவு இல்லாமல் மூன்றாவது பிரிவு ஒன்றும் வந்தது . அதற்கு அண்டே குறும்பர் என்று பெயர் வைத்தனர் . அண்டே என்றால் பாத்திரம் என்று பொருள் . இந்தப் பாத்திரத்தில் ஆட்டின் பாலைச் சேகரித்து வைத்தால் , அவர்களுக்குப் பாத்திரத்தை அடையாளமாக அண்டை குறும்பர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது . 

குண்டக்கால் சித்தன் கதை:
-------------------------------------------------

 ரேவண்ண மரம் என்ற ஒரு வகையான மரங்கள் நிறைந்த கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள காட்டில் உள்ள புற்றுக்குச் சிவன் , பார்வதி , கிருஷ்ணன் போன்ற தேவர்கள் ஒன்றாக இணைந்து நரமனிதனை உருவாக்கி , அவனை வீச்சு வலை என்னும் ஒரு வலையினைக் கொண்டு கட்டி வைக்கின்றனர் . அக்னி மூலையில் இருந்த மற்றொரு புற்றுக்குப் பூசை செய்து ' அவுசேரி ' மரம் உருவாக்கி , அதிலிருந்து காட்டுப் பெண் ஒருத்தியை உருவாக்கி அவளையும் வீச்சுவலை கொண்டு காட்டுமனிதனுக்கு எதிர்திசையில் கட்டி வைக்கின்றனர் . 

காட்டுமனிதர்களுக்கு முதலில் தேவர்கள் காட்டிலுள்ள காய் கனிகளைப் பறித்து உண்ணுவதற்குக் கற்றுக்கொடுகின்றனர் . சில நாட்கள் கழித்துக் காட்டிலுள்ள குளத்தில் நீராடக் கற்றுக்கொடுக்கின்றனர் . காட்டுமனிதனுக்கு உடல் முழுவதும் முடி உள்ளது . 

காட்டுப்பெண்ணிற்குத் தலையில் மட்டும் முடி இருந்தது . காட்டில் உள்ள இலை , தழைகளையும் , நார்களையும் கொண்டு ஆடை உருவாக்கக் கற்றுக்கொடுத்தனர் . இருவருக்கும் பேசும் மொழியைத் தெய்வங்கள் கற்றுக்கொடுத்தனர் . அதன் பின்னர் காட்டு மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்ளப் பரண் போன்ற மேடையை அமைத்து அதில் குடில் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தனர்.

அக்குடிலில் தங்கள் தாம்பத்திய வாழ்கையைத் தொடங்கிய காட்டுமனிதர்களுக்கு ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று 12. பிள்ளைகள் பிறந்தனர் . அதில் 12 ஆவது குழந்தைக்குக் கால் ஒன்று ஊனமாகப் பிறந்ததால் அவனுக்கு குண்டக்கால் சித்தன் என்று பெயரிட்டனர் . இக்குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தது . காட்டு ஆணின் பெயர் சுக்கிலராஜா என்றும் காட்டுப் பெண்ணின் பெயர் சுக்கல்மா என்றும் பெயர் பெற்று முதியவர்களாகிவிட்டனர் . 11 பிள்ளைகளும் பல இடங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவினை உண்டு விட்டுத் திரும்பும்பொழுது வெறுங்கையுடன் திரும்புகின்றனர் . குண்டக்கால் சித்தன் மட்டும் தன் பெற்றோருக்கும் சேர்த்து உணவு சேகரித்துக் கொண்டு வந்து தருகிறான் . இதைத் தொடர்ந்து இவர்கள் மேலகிரி பர்வதம் என்ற மலைப்பகுதிக்குச் சென்றனர் . 

இங்கு ரேவணி மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது . சிவன் , பார்வதி இருவரும் மாலையைக் கயிறாக மாற்றி மரத்திலுள்ள தேனைப் பறித்து உண்டுகொண்டிருந்தனர் . இதைக்கண்ட குண்டக்காலு சித்தன் கற்களை எடுத்து தேவர்கள் மீது வீசினான் . இதனால் தேவர்கள் தேன் அடை ஒன்றைக் குண்டக்காலு சித்தனிடம் வீசினார்கள் . அதைச் சுவைத்துப் பார்த்த சித்தன் தேனின் சுவையால் அதனை முழுவதும் பெறவேண்டும் என்று தன் நாக்கைப் பிடுங்க முயற்சித்தான் . அதனைக் கண்ட தேவர்கள் முழுத் தேன்கூட்டையும் முழுவதுமாகக் கொடுத்துவிட்டனர் . கொய்து அதை தன் அம்மாவிடம் கொடுக்கிறான் . 11 சகோதரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான் . தன் தாய் தேன் உண்ணாததை  அறிந்து அழுகின்றான் .

 அதனைக்கண்ட சகோதரர்களும் தாக்க வருகின்றனர். பெற்றோர்கள் அவர்களைத் தடுகின்றனர் . பசி மயக்கத்தில் உறங்கி விடுகின்ற குண்டக்காலு சித்தனை நடு இரவில் 11 சகோதரர்களும் இணைந்து மலைக்குத் தூக்கிச் சென்று விடியற்காலையில் சித்தனை அடித்து , மலையிலிருந்து உருட்டிவிடுகின்றனர் . அந்நேரத்தில் அவ்வழியாக ரதத்தில் சென்று கொண்டிருந்த தேவர்கள் குண்டகாலு சித்தனைக் காப்பாற்றி அவர்களுடைய இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர் . அங்கு அவனுடைய 
பெற்றோர்கள் இறந்துவிட்டதைப் பார்த்து அழுது புலம்புகின்றான் .  

தன் பெற்றோருக்குத் தேவர்கள் முன்னிலையில் பாத பூஜை செய்து இறுதி சடங்கினை முடித்துச் சுக்கலம்மா குளக்கரையில் அமர்ந்திருக்கிறான் . அப்பொழுது சுக்கலம்மா குளத்திலிருந்து குண்டகாலு சித்தன் தன் பெற்றோருக்கு ஈமச் சடங்கு செய்ததால் , குளக்கரைப் புற்றிலிருந்து ஒரு குறும்பாடு வெளியே வந்தது . அக்குறும்பாட்டுக் குட்டி , சித்தனை நோக்கித் தாவித்தாவி வந்தது . அதனைக் கண்ட குண்டக்காலு சித்தன் ஏதோ ஒரு புதிய மிருகம் தன்னைநோக்கி வருவதாக எண்ணி மலையிலுள்ள குகையில் சென்று மறைந்து கொள்கிறான் . மூன்று நாட்களாகியும் வெளியே வராமல் இருக்கிறான் . இதனைக் கண்ட தேவர்கள் அக்குறும்பாட்டில் பால் கறந்து குடிக்கின்றனர் . அதனைக் கண்ட குண்டக்காலு சித்தன் தேவர்களையும் கல்லால் எறிந்தும் தகாத வார்த்தைகளையும் சொல்லித் திட்டிவிடுகின்றான் . 

தேவர்கள் குண்டக்காலு சித்தனை நோக்கிக் கன்னடத்தில் ' குறி ' எனப்படும் ஆடுகள் உள்ளன . அவற்றைப் பெற்றுக் கொள்ள ' வா ' என்பதற்கு , குறி + பா என்று அழைத்தனர் . அதுவே பின்னர் குறுபா என்று வந்ததாக இக்கதையில் வரும் செய்தி கூறுகிறது . குகையிலிருந்து வெளியே வந்த குண்டக்காலு சித்தனிடம் ஆட்டையும் குட்டியையும் காட்டுக்கொடியில் கட்டிக் கொடுத்தனர் . அவ்வாடுகளைக் குண்டக்காலு சித்தன் குளத்தில் கழுவிப் பராமரித்துவந்தான் . இவை இரண்டும் சில ஆண்டுகளில் வளர்ந்து ஆட்டு மந்தையாக மாறிவிடுகின்றன . அக்காடு முழுவதும் குண்டக்காலு சித்தனுடைய ஆட்டுமந்தையாகக் காணப்படுகின்றன .12 ஆண்டுகள் கழித்து அவனது சகோதரர்கள் அவனிடம் வந்து சேர்கின்றனர் . அவர்களுக்குத் தனது ஆட்டுமந்தையினைப் பிரித்து மேய்க்கக் கொடுக்கின்றான் . இவர்களுடைய தலைவனாக குண்டகாலு சித்தன் இருக்கின்றான் . 

குண்டகாலு சித்தனுடைய ஆட்டுமந்தையைக் கவருவதற்கு அவனுடைய சகோதரர்கள் திட்டம் போட்டனர் . அதன்படி காட்டுக்கொடியினைக் கொண்டு மரத்தில் சித்தனைக் கட்டிப்போட்டு விட்டு மந்தையைக் கவர்ந்து செல்கின்றனர் . அதனைக் கண்ட குண்டகாலு சித்தன் அழுது புலம்புகின்றான் . இவனுடைய அழுகுரல் கேட்டு கசுவம்மா தனது சகோதரர்களின் அனுமதியைப் பெற்று ( குந்தாரபள்ளி பிரப்பா , பூசாரி சித்தன் , ரேவண்ண சித்தப்பா , சிடி சித்தப்பா இவர்களுடைய தங்கை ) முத்தூர் மலையிலிருந்து பார்த்தாள் . குண்டக்காலு சித்தனின் மந்தை சூளகிரி நோக்கிச் செல்வதைப் பார்த்து கசுவம்மா சூளகிரி சென்று அந்த மந்தையைத் தடுத்து நிறுத்தி ஆட்டு மந்தையையும் அவர்களையும் சுக்கலம்மா குளத்திற்குக் கொண்டு சென்று மந்தை யாருடையது என்று விசாரிக்கிறார் . அதற்குச் சகோதரர்கள் 11 பேரும் மந்தை தங்களுடையது என்று கூறுகின்றனர் . அதற்குச் சாட்சியாக தேவர்கள் ஆட்டுமந்தை உங்களுடையது என்றால் கௌரம்மா ( வெற்றிலை ) எடுத்து வாருங்கள் என்று கூறுகின்றனர் . 11 சகோதரர்களும் வேறு இலையைக் கொண்டு வந்தனர் . இரண்டாவது சாட்சியாக இது உங்களுடைய ஆடுகளாக இருந்தால் இந்தப் பாலை உங்களுடைய கைகளில் கறந்துவிடுகிறேன் . பால் உங்களுடைய கைகளில் நிற்கவேண்டும் என்று கூறி , பாலைக் கறந்து விடுகின்றனர் . குண்டகாலு சித்தனைத் தவிர மற்றவர்களின் கைகளில் பால் நிற்கவில்லை . இதனால் தேவர்கள் ஆட்டுமந்தையைக் குண்டகாலு சித்தனிடம் ஒப்படைத்தனர் . 


 கசுவம்மா மற்றும் பூசாரி சித்தப்பன் என்னும் குந்தாரப் பள்ளி பீரப்பன் கதை 
-----------------------------------------------------------------
குந்தாரப்பள்ளி என்னும் காட்டுப்பகுதியில் பூசாரி சித்தன் , ரேவண சித்தப்பா , சிடி சித்தப்பா ஆகிய மூன்று சகோதரர்களும் கசுவம்மா என்ற தங்கையும் வாழ்ந்துவந்தனர் . கசுவம்மாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ரேவண,
சித்தனும், சிடிசித்தனும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்றனர் . அந்த வழியில் குண்டகாலு சித்தன்  
என்பவன் மட்டும் தன்னுடைய ஆட்டு மந்தையுடன் ஊஞ்ச மரத்தடியில் அமர்ந்து இருந்தான் . வேறு மனிதர்கள் யாரும் இல்லை . அதனால் இருவரும் பண்ணாசி மலைக்குச் சென்றனர் . அங்கு குதிரையுடன் இருவரும் சுருண்டு விழுந்து உயிர்துறக்கின்றனர் . சிவன் , பார்வதி இருவரும் இவர்களுக்கு உயிர் கொடுத்து அனுப்புகின்றனர் , பண்ணாடி மலையில் சண்ணாசி இலையை ( கஞ்சா இலை ) பறித்துக் கொண்டு திரும்புகின்றனர் . வரும்வழியில் ஜகராயனைப் பாவாடைராயன் காட்டுப்பகுதியில் மரப்பொந்தின் உட்பகுதியில் இருப்பதைக் கண்டு அவனை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர் . முடியவில்லை . பின்னர் தங்களுடைய இருப்பிடமான குந்தாரபள்ளிக்கு வந்தனர் .

 தங்கை ஆலுமொல கசுவம்மாவும் அண்ணன் பூசாரி - சித்தன் என்ற குந்தாரப் பள்ளி பீரப்பனும் குறி ஆட்டில் பால் கறந்து குடிப்பதைக் கண்ட ரேவண சித்தனும் சிடி சித்தனும் தங்கள் மந்திர சக்தியால் பாலை ரேவணி இலையாகவும் கருவண்டாகவும் மாற்றிவிடுகின்றனர் . உங்களுக்குப் பால் கொடுக்காமல் நாங்கள் குடிக்கமாட்டோம் என்று அண்ணன் தங்கை இருவரும் சத்தியம் செய்தனர் . பின்னர் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தீர்களா என்று கேட்டனர் . பாவாடைராயன் காட்டில் ஜகதாலமரப்பொந்தில் ஜகராயன் இருக்கின்றான் அவனை மணம் முடிக்கலாம் என்று கூறுகின்றனர் . ரேவண்ண சித்தனிடமும் சிடிசித்தனிடமும் அவனை அழைத்து வருமாறு கூறுகின்றார் . அதன்பின் இருவரும் பாவாடைராயன் காட்டிற்குச் சென்று கெண்டக கத்திரி மூலம் ஜகராயனை மரப்பொந்திலிருந்து சங்கிலியால் கட்டிவைத்து சண்ணாசி இலையால் ( கஞ்சா இலை ) புகை உண்டாக்கி ஜகராயனை சுவாசிக்கச் செய்கின்றனர் . புகையை சுவாசித்த ஜகராயன் போதையில் மயங்கிவிடுகிறான் . அவனைக் குந்தாரப்பள்ளிக்குக் கொண்டு வருகின்றனர் . அடுத்த நாள் திருமணம் நடைபெறுகின்றது . 

திருமணம் முடிந்தவுடன் ஜகராயன் தனது இருப்பிடமான பாவாடைராயன் காட்டிற்குச் சென்றுவிடுகின்றான் . அங்கு ஜகராயனது ஜகதால மரம் , குறி ஆடு , குட்டி எல்லாம் சாம்பலாகி இருந்ததைக் கண்டு அழுது புலம்புகின்றான் . இந்நிலையில் குந்தாரப் பள்ளியில் கசுவம்மா தன்னுடைய கணவரைப் பார்க்கச் செல்கின்றேன் . சகோதரர்கள் யாரும் என்னுடன் வரக்கூடாது என்று கூறிவிட்டு பாவாடைராயன் காட்டிற்கு வருகிறாள் . அவளது வருகையைக்கண்டு ஜகராயன் கற்களை வீசித் தடுத்தும் கசுவம்மா கணவனின் இருப்பிடத்திற்கு வருகிறாள் . அவள் பாதம் பட்டதும் சாம்பலான ஜகதால மரம் , குறி ஆடு , குட்டி அனைத்தும் மீண்டும் உயிர்பெற்று எழுந்தன . இதைக் கண்ட ஜகராயன் தன்னுடைய மனைவியான கசுவம்மா காலில் விழுந்து வணங்குகின்றான் . 

அதன்பின் மனைவியைத் தன் இருப்பிடத்தில் ஏற்றுக்கொண்டாலும் 12 ஆண்டுகள் அவளுடன் பேசாமல் இருக்கிறான் . ஜகராயன் குறியாட்டின் பாலைக் குடித்து வருகிறான் . கசுவம்மா காட்டிலுள்ள தேன் , காய் , கனிகளை உண்டு வாழ்கின்றாள் . குந்தாரப் பள்ளி பீரப்பன் என்னும் பூசாரி சித்தன் தங்கையின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைக் காண இருவரை அனுப்பி வைக்கிறான் . வந்த விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்கும் கசுவம்மா அவர்களை அமர வைத்து மலைக்குச் சென்று , தேனெடுத்து வந்து , உணவளிக்க முயற்சிக்கிறாள் . இத்தேனில் ஜகராயன் மண்ணைப் போடுகிறான் . ஆனாலும் விருந்தினர்கள் தன் உண்டபொழுது மண்ணில்லாமல் இருந்ததைக் கண்டு மனைவியின் சக்தியை எண்ணி அவளுடைய மன்னிக்க இருவரும் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கிறான் . ஜகராயனை மகிழ்ச்சியாகக் குடும்பவாழ்வில் இணைகின்றனர் . இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான் . அவனுக்குப் பில்லுமாறன் என்று பெயர் சூட்டுகின்றனர் . பில்லுமாறன் ஒரு வயதுக் குழந்தையாக இருந்த போது அளவு கடந்த மழை பெய்கிறது . அதனால் ஜகராயன் கசுவம்மாவிடம் பில்லுமாறனைத் தூக்கிக்கொண்டு ஜக்கேரி அள்ளியிலுள்ள பில்லுமாற குடிக்குச் சென்று தங்கிக் கொள்ளுமாறு ஜகராயன் கூறுகின்றான் . கணவனின்
கூற்றுப்படி அவ்விடத்திற்குச் செல்லுகின்றாள் . அங்கு  கசுவம்மா காட்டுக்கொடிகள் இலைகளைக் கொண்டு தொட்டில் கட்டி அதில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு , ஏழுபானை கூழ்செய்து தனது கணவன் ஜகராயனுக்கு எடுத்துக்கொண்டு பாவாடைராயன் காட்டிற்குச் செல்கிறாள் .

 கசுவம்மா காட்டிற்குச் சென்ற வேளையில் குந்தாரப் பள்ளி பீரப்பா என்னும் பூசாரிசித்தன் தன் தங்கையைக் காண ஜெக்கேர அள்ளி கோயிலுக்கு வருகிறான் . அங்கு குழந்தை பில்லு மாறனைக் கண்டு அவனுடன் பாம்பு வடிவம் கொண்டு விளையாடுகிறான் . பசியால் குழந்தை , பாம்பின் கழுத்தை நெறித்து அழுகிறது . இதனை உணர்த்த பூசாரி சித்தன் தன் வாலினைக் குழந்தையின் வாயில் வைத்துப் பாலூட்டுகிறான் . வயிறு நிறைந்தவுடன் குழந்தை பாம்பின் கழுத்தை விட்டுவிடுகிறது . தன் தங்கையை வசதியில்லாத இடத்தில் கொடுத்துவிட்டோம் என்று நினைத்து வருந்தி , குழந்தைக்குத் தங்கத்தால் ஆன நகைகள் பூட்டி , தங்கத் தொட்டில் போன்றவற்றைக் கொடுத்துவிட்டுத் தன் தங்கையைத் தேடி வருகிறான் . 

தன் கணவன் வீட்டிற்குச் சகோதரர்கள் யாரும் வரக்கூடாது என்று கசுவம்மா கூறியதால் கிழவன் வேடம் பூண்டு தங்கையைப் பின்தொடர்கிறான் . யாரென்று அறியாத கசுவம்மா அவனை விரட்டுகிறாள் . தனக்குப் பசிப்பதாகவும் அருந்துவதற்குப் பால் தருமாறும் கேட்கிறான் . தொடர்ந்து அவனை விரட்டிக்கொண்டே இருக்கிறாள் கசுவம்மா வேறு வழியின்றிப் பாவாடைராயன்காட்டுக்கருகில் தன் உண்மை ரூபத்தைக் காட்டுகிறான் பூசாரிசித்தன் . அவனைக்கண்ட தங்கை அழுதுபுலம்புகிறாள் . தன் கணவன் முன்பு உருவத்தைக் காட்டக்கூடாது என்றும் தன் கணவன் கோபக்காரன் என்றும் கூறுகிறாள் . பூசாரிசித்தன் வேப்ப மரத்தடியில் நின்று கொண்டு தங்கையை மட்டும் அனுப்புகிறான் . தன்னுடைய அண்ணனுக்குச் சிறிது பால் தருமாறு கணவனிடம் கேட்கிறாள் . ஆனால் ஜகராயன் கொடுக்க மறுக்கிறான் . 

கசுவம்மா ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டு " நான் பதிவிரதையாக இருந்தால் , நல்ல குலத்தில் பிறந்தவளாக இருந்தால் இங்கு ஓர் ஆறு உருவாக வேண்டும் என்று கூறுகின்றாள் . அவ்வாறு ஆறு ஒன்று உருவாக , அதில் தலைமுழுகி எழுந்து தனது வலது மார்பகத்தில் பால் கறந்து வைத்துவிட்டுத் தன் அண்ணனை எழுப்பினாள் . ஆனால் அந்தப் பாலையும் ஜகராயன் குடித்துவிடுகிறான் . மீண்டும் இடப்புற மார்பில் பால் கறந்து கொண்டு ஓடினாள் . அதனையும் பிடுங்க வந்தான் ஜகராயன் . அவனைக் கெண்டக கத்திகொண்டு தாக்கினாள் . மயக்க நிலையிலிருந்து பூசாரிசித்தனுக்கு வாய்ப் பூட்டுப் ( பாய் பீக ) போட்டு , பாலை ஊட்டினாள் . பாலை உண்ட பிறகு களைப்பு நீங்கி எழுந்த பூசாரி சித்தன் தன் தங்கைக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறான் . 

கசுவம்மா தனது அண்ணனிடம் 3,00,000 முதிர்ந்த குறியாடு , இளம்குட்டிகள் 80,000 , ஆண் அல்லது கிடா 9,000 , முழங்கால் அளவு சாணம் , கணுக்கால் அளவு கோமயம் இவையாவும் நாளை காலையில் பாவாடைராயன் காட்டில் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டாள் . அவள் கேட்டபடியே வரம் அளித்தான் . ஒப்புக்கொண்ட நிலத்தில் மந்தைகளை நிறுத்தினால் ஒன்பது கண்டகம் தானியம் வரும் என்றும் கூறினான் . ஆடி மாதம் வரும்போது கெடிகை குறுமன் ஆடு ஒன்றை எனக்குக் கொடுப்பான் . கசுவம்மா நீ எனக்கு இரண்டு ஆடு கொடுப்பாயா என்று கூறு , வாக்குமாறக் கூடாது என்று கூறிவிட்டுச் சென்றான் . 

மாலையில் ஜக்கேரி அள்ளிச் சென்று , மகன் பில்லுமாறனுக்கு அண்ணன் குந்தாரப்பள்ளி பீரப்பன் கொடுத்துள்ள பரிசுப் பொருட்களைக் கண்டு மகிழ்கிறார்கள் . மறுநாள் காலையில் தன் கணவனுக்குக் கஞ்சி கொண்டு செல்கிறாள் . அங்கு தன் அண்ணன் கொடுத்த வரம் பலித்துவிட்டதைப் பார்க்கிறாள் . விடிந்து வெகுநேரமாகியும் உறங்கிக்கொண்டிருந்த ஜகராயன் கண்விழித்து ஆட்டு  மந்தையைப் பார்க்கும்பொழுது அத்தனையும் நோயுற்று மடிகின்றன.

 இதனைக் கண்ட கசுவம்மா
தனது அண்ணனுக்குப் பால் கொடுக்காததே காரணம் என்று கூறுகிறாள் . இதனை உணர்ந்த ஜகராயன் தனது மனைவி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் . எனக்கு இப்படி ஒரு மாமா கிடைத்துள்ளார் . அதை அறியாமல் தவறு செய்து விட்டேன் என்று கூறித் தன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் . ககவம்மா தனது அண்ணனை எண்ணி வணங்கியவுடன் இறந்துபோன எல்லா ஆட்டு மந்தைகளும் உயிர் பெற்று எழுகின்றன . ஜகராயன் அப்பொழுது ஆடிமாதம் 18 ஆம் நாள் உனக்கு எனது மந்தையிலிருந்து பால் கொண்டு வந்து தருகிறேன் என்று உறுதி கூறுகிறான் .

 குறும்பர் இனத்தில் 18 வகைகள் உள்ளன . இவர்கள் அனைவரும் பூசாரிசித்தப்பனுக்கு ஆடி மாதம் பிறந்ததும் தங்கள் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு குட்டியைக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளனர் . இந்த ஒப்பந்தத்தின்படி ஓர் ஆடி மாதம் பூசாரிசித்தப்பன் கம்பளியைத் தோள்மீது போட்டுக்கொண்டு , ஐகராயன் மந்தைக்குச் செல்கிறான் . அங்கே சென்று ஜகராயனிடம் , எனக்கு உண்டான ஆட்டுக்குட்டியைக் கொடுக்குமாறு கூறுகின்றான் . ஆனால் ஜகராயன் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் தன்னால் தர இயலவில்லை என்று கூறுகிறான் . அவன் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு வரும்பொழுது இரண்டு குட்டிகள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டுத் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகிறான் . 

அதன்பிறகு ஜகராயன் மந்தை பெருகுகிறது . மந்தையைக் கொண்டு ஒரு விவசாயிடம் கிடை போட ஒப்பந்தம் போடுகிறார் ஜகராயன் , ஒப்பந்தப்படி கிடைபோட்ட பிறகு அதற்கான தானியத்தைத் தராமல் விவசாயி ஜகராயனை ஏமாற்றி விடுகிறான் . இதனால் வருத்தம் அடைந்த ஜகராயன் பூசாரி சித்தப்பனை வேண்ட , நிலத்தில் உள்ள ஆட்டுப்புழுக்கை அனைத்தும் கரு வண்டுகளாக மாறிவிடுகின்றன . இவ்வாறு ஜகராயன் வளமாகத் தனது ஆட்டு மந்தையுடன் வாழ்ந்து வருகையிலே ஆடி மாதமானது வருகிறது . பூசாரிசித்தப்பன் தனக்கு உண்டான ஆட்டுக்குட்டிகளைக் கெடிகைக் குருமன்களிடம் பெற்றுக்கொண்டு ஜகராயன் மந்தைக்கு வருகிறான் .

 ஜகராயனிடம் மந்தைக்குச் சென்று , தனது பங்கான இரண்டு ஆட்டுக்குட்டிகளைத் தருமாறு கேட்க ஜகராயன் வழக்கப்படிக் கொடுக்கும் ஒரு குட்டியைத்தான் தருவேன் . இரண்டு குட்டிகளைத் தரமாட்டேன் என்று மறுக்கிறான் . இருவரிடையே சண்டை ஏற்பட்டு பூசாரிசித்தப்பன் கெண்டககத்திரியால் ஜகராயனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறான் . பின்னர் கசுவம்மாவின் வேண்டுதலை ஏற்று ஜகராயனுக்கு உயிர்கொடுக்கிறான் . ஜகராயனும் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டு , இரண்டு குட்டிகளைத் தருகிறான் . இனி ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் ஆடி மாதம் ஆட்டுக்குட்டி மற்றும் பாலும் கொடுக்கிறேன் என்று கூறி முடித்தான் . 

இக்கதைகளில் இருந்து தங்களது ஆட்டு மந்தைகள் இயற்கையாய்த் தோன்றியவை அல்ல இறைவனால் தங்களுக்காகப் படைக்கப்பட்டவை . ஆகவே ஆடுகள் வளர்ப்பது என்பது இறைவனால் தங்கள் இனத்திற்கு படைக்கப்பட்டவை . அதோடு தங்கள் முன்னோர்கள் தெய்வங்களாகத் தங்களையும் தங்கள் மந்தைகளையும் காக்கின்றனர் என்கிற இவர்களது நம்பிக்கையும் புலனாகிறது ....

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!