சங்ககால குறும்பர் மன்னன் கழுவுள்

சங்ககால குறும்பர் மன்னன் கழுவுள்

காமூர்

காமூர் என்பது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் எனத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சங்ககாலத்தில் காமூரை குறும்பர் ஆயர்களின் தலைவனான கழுவுள் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் கொடை வழங்கும் பெருந்தகை. இவனை மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடிச் சிறப்பித்துள்ளார். 

வேளிர் அரசர்கள் 14 பேர் ஒன்று திரண்டு கழுவுளைத் தாக்கியபோது காமூர் கலங்கியது போலத், தலைவனை நம்பிய நெஞ்சம் அவன் பிரிந்தபோது கலங்கியது என ஒரு புலவர் குறிப்பிடுகிறார். 

கழுவுள் குறும்பர் அரசனின் குடிமக்கள் அனிரைகளை மேய்த்து வாழ்ந்துவந்தனர். இவர்கள் அண்டர்என்று குறிப்பிடப்படுகின்றனர், பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் இவர்களின் ஊரைப் பாழாக்கினான் 

மேலே சுட்டப்பட்ட குடிகளில் அண்டர் குடியினர் பற்றி சங்க இலக்கியங்கள் சொற்பளவிலான குறிப்புகளையே தருகின்றன.

அண்டர்
கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன் (கு.117:3-4)

அண்டர்கள் கட்டிய கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் எருதைப்போல தோன்றும் துறைவன்’ என்றும்

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் (கு.210:1-2)

கண்டீர நாட்டை ஆண்ட நள்ளியினது காட்டில் வாழ்கின்ற அண்டர்களின் பல பசுக்கள் தந்த நெய்யுடன்’ என்றும்

பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாமமன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி அண்டர் ஓட்டி (ப.ப.88:7-9)

காற்றினைப் போல் விரைந்து செல்லும் குதிரைப்படை கொண்ட அண்டர்களை ஓட்டி’ என்றும் அண்டர்களைப் பற்றி சங்க பாக்கள் குறிப்புதருகின்றன.

அண்டர் என்னும் சொல் பொதுவாக பகைவர் எனப் பொருள்படும் அண்டார் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம்; அண்டர்களும் பொதுவர்களும் குறும்பர் எனப்பட்டனர் என்று துரை அரங்கசாமி குறிப்பிடுகிறார்.இவர்கள் ஆநிரைப் பேணும் ஆயர் தொழிலைச் செய்பவர்கள். இவர்களது தலைவன் கழுவுள் என்பவனாவான். இவரனது தலைநகரம் காமூர் என்பதாகும். இந்நகரம் தமிழகத்தின் வடவெல்லைக்கு வடக்கே, வட ஆரிய அரசுகளின் தெற்கெல்லைக்குத் தெற்கேயுள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

கழுவுள், பல குறுநில மன்னர்களைப் போரில் வென்றவனாவான். 14 வேளிர்களோடு போரிட்டான் என அகம் 135ஆம் பாடல் குறிப்பிடுகிறது. எருதுகளும் பசுக்களும் நிரம்ப உடைய கழுவுளின் வீரர்கள் புலவு நாற்றம் வீசும் தங்களுடைய வில்லைக் கொண்டு பகைப்புலத்திலிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வருவார்கள் என்றும், இவனது நாட்டில் பாலும் தயிரும், ஆய மகளிர் தயிரினின்று எடுக்கும் வெண்ணெயும் நிரம்பியிருக்கும் என்றும், இவன் கடம்பர்களுடன் இணைந்து சேரமானோடு பொருதான் என்றும், போரில் சேரமான் இவனது ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டான் என்றும், சேரமானது வீரர்கள் இவனது நாட்டையும் தலைநகரத்தையும் பாழ்படுத்தினர் என்றும், ஆவின் பயனாகிய பாலும் தயிரும் கொண்டு செல்வச் செருக்குடன் இருந்த வாழ்ந்த மக்களையுடைய இவன், சேரமானோடு பொருதபின், எப்போதும் காலையில் கேட்கும் தயிர் கடையும் ஒலி இல்லாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினான் என்றும், விருந்தினரை உபசரித்து வளமாக வாழ்ந்த இவனது நாட்டுமக்கள், தங்கள் செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு, பிறநாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அரிசில் கிழார் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தில் கூறுகிறார்.

இப்படி அண்டர்கள் குறித்துப் பயிலப்பட்டுள்ள செய்திகளின் மூலம் அண்டர்கள் கால்நடை மேய்க்கும் குறும்பர் ஆயர் குடியினரின் ஒரு வகையினர் என்றும், அவர்கள் கழுவுள் என்பானின் கீழ் வாழ்ந்தனர் என்றும் பெறப்படுகிறது. போர் செய்யும் அளவிற்கு குதிரைப்படையைக் கொண்டிருந்தனர்...

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!