நிகண்டுகளில் குறிப்பிடபடும் குறும்பர்அரன்(குறும்பு)

நிகண்டுகளில் குறிப்பிடபடும் குறும்பர்அரன்(குறும்பு)
××××××××××××××××××××××××××××××××××

              ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கண - இலக்கியங்களைக் கற்க விரும்பினால் முதல் முயற்சியாக "நிகண்டு' நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். இன்று "அகராதிகள்' என அழைக்கப்பெறும் சொற்பொருள் விளக்கம் கூறும் நூல்களே அன்று "நிகண்டுகள்' எனப்பெற்றன. அவை செய்யுளிலேயே எழுதப்பெற்றிருக்கும். இந்நிகண்டு நூல்களே
இலக்கண - இலக்கியங்களைக் கற்பதற்குரிய கருவி நூல்களாகும்.
அவ்வகையில் மாணாக்கர்கள் மனனம் செய்த நிகண்டு நூல்களாக சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு, பிங்கில நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வரிசையில் அமைந்ததுதான் "நாநார்த்த தீபிகை' என்னும் நிகண்டு நூலாகும். இந்நூல் 1102 விருத்தப்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது. 5452 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்நூல் ஒரு சொற் பல்பொருள் உரைக்கும் நிகண்டு நூலாகும். இந்நிகண்டு நூலை திருநெல்வேலியைச் சார்ந்த கவிராயர் முத்துசுவாமிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். இவர், திருநெல்வேலிக்கு வந்திருந்த "ஸார்ஜன்ஹ்' உள்ளிட்ட ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், திருவாவடுதுறை மடத்தின் சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர் என அறியப்படுகிறார். முத்துசுவாமிப்பிள்ளை தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது முதலிய மொழிகளைக் கற்றறிந்துள்ளார் என்பது "நாநார்த்த தீபிகை'யின் வழி தெரியவருகிறது.
இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்டிதராய் விளங்கிய சு.அனவரதவிநாயகம் பிள்ளையாவார். 1936-இல் இத்தீபிகை பதிப்பிக்கப்பட்டுள்ளது. ""இப்பதிப்பிற்கு, நூலாசிரியர் மகன் சோமசுந்தரம் பிள்ளையவர்கள் கையால் எழுதிய காகிதப் பிரதியே
ஆதாரமாகும்'' எனப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ""அவர் இந்நூலை பூர்த்தி செய்யாது சிறிது குறையாய் விட்டிருந்தாரோ என்றூகித்தற்கு நியாயஞ்சிலவுண்டு. 149-வது செய்யுளிற் பொருட்பிறழ்ச்சியும், 229, 382-வது செய்யுள்கள் பொருள் தெளிவின்றியிருப்பதும் 159-வது செய்யுளில் ஒரு சொல் ஒரு பொருளோடிருத்தலும், அவரம், ஏட்டை, கடமை, காயல், கிரந்தம், சீவநீ, நேயம், பிரதேசம், மைதுனம் என்னும் சொற்கள் இரண்டு இடங்களில் பொருளுரைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியருக்குத் தாமியற்றிய செய்யுள்களை மீண்டும் நோக்கித் திருத்துவதற்கு அவகாசமில்லாது போயிற்றோ என்றும், செய்யுள்களிற் சில ஆசிரியர் வைத்துப்போன குறிப்புகளைக் கொண்டு பிறர் இயற்றியனவோ என்றும் சங்கையுறச் செய்யும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பில் 689 பக்கங்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்நூல் எப்பொழுது எழுதப்பெற்றது என்ற குறிப்பின்றி உள்ளது. பறந்தலை, பறம்பு, குறிஞ்சி, குறும்பு, குறும்பொறை ஆகிய சொற்களுக்குப் பொருள் கூறும் விருத்தப்பாடல் ஒன்று வருமாறு:

""பறந்தலை பிணஞ்சேர் காடு செம்புலமாம்
பறம்பென்ப பருப்பதங்கொங்கை
குறிஞ்சி செம்முள்ளி போர்மரமோர்பண்
குன்றுசார் நிலத்தொடோ ரிராகம்
குறும்பு பொல்லாங்கு கொடுஞ்சமம்
பாலை நிலத்தினூர் குறும்பரணிருக்கை
குறும்பொறை குறிஞ்சி நிலத்தொடந் நிலத்தூர்
குன்றுகா டென்னநாற் பெயரே'' (செய்.1041)

இச்செய்யுள் காட்டும் பொருள் வருமாறு:
பறந்தலை - பிணஞ்சேர்காடு, பொருகளம்.
பறம்பு - மலை, கொங்கை.
குறிஞ்சி - செம்முள்ளி, ஓர்மரம், ஓர்பண், குன்றுசார் நிலம், ஓர் இராகம்.
குறும்பு - பொல்லாங்கு, போர், பாலை நிலத்தூர், குறும்பர் அரணிருக்கை.
குறும்பொறை - குறிஞ்சி நிலம், குறிஞ்சி நிலத்தூர், குன்று, காடு.
இதுபோன்ற அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பெறுவது இன்றைய இன்றியமையாத் தேவையாகும். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியின் சொல்லாராய்ச்சிக்கும், சொல்வளத்திற்கும் அப்பதிப்பு பெரிதும் பயன்தரும்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!