குறும்பர் இனத்தவர்களின் “ஜகுழி” என்கிற மயானம் மற்றும் அதன் வழிபாட்டு மரபுமுறைகளைப் பற்றி

குறும்பர் இனத்தவர்களின் “ஜகுழி” என்கிற மயானம் 
மற்றும் அதன் வழிபாட்டு மரபுமுறைகளைப் பற்றி
===================================================

தருமபுரி மாவட்டம், பாலஜங்கமணஹள்ளி கிராமத்தில் வசிக்கும் குறும்பர் இனத்தில் “ஆனை” அதாவது “யானை” குலத்தைச் சேர்ந்தவர்கள் வம்சாவழியாக இறந்தவர்களை ஒரே இடத்தில் தொடர்ந்து புதைக்கும் இடத்தை “ஜகுழி” என்று அழைக்கிறார்கள். இதில் ஆண்கள் மட்டுமல்லாது இந்த குலவம்சத்திற்கு வாக்கப்பட்டு வரும் பெண்களும் அடங்குவர். திருமாணமாகாத பெண்பிள்ளைகளுக்கும் இந்த ஜகுழியில் இடமுண்டு. 

ஆனால், இந்த வம்சாவழியில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்குப்பின் கணவனால் கைவிடப்பட்டோரையோ, விதவைகளையோ இங்கு புதைக்கும் வழக்கம் இல்லை. அவர்கள் எந்த குலவம்சத்தில் வாக்கப்பட்டுச் சென்றார்களோ அங்கு மட்டுமே அனுமதி. இல்லையேல் அந்த ஊரின் பொது மயானத்தில் மட்டுமே புதைக்கப் படுகிறார்கள். 

காலப்போக்கில் ஏதோவொரு நிர்ப்பந்தத்தினால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துவிட்டவர்களுக்கும் அவருக்கு வாக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கும் இந்த ஜகுழியில் இடம் ஒதுக்கவேண்டிய காலசூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றமும் கடந்து நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்குள்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இறந்தவர்களை இங்கே தகனமூட்டுவதற்கு இவர்கள் அனுமதிப்பதில்லை. புதைப்பதற்கு மட்டுமே இந்த ஜகுழியில் அனுமதி உள்ளது.

அதே சமயம் வேறு குலவம்சத்தை சார்ந்தவர்களை இந்த “ஆனை” குலவம்சத்தவர்களின் ஜகுழியில் புதைக்க இவர்கள் அனுமதிப்பதில்லை. 

இதே கிராமத்தில் இதே குரும்பர் இனத்தைச் சேர்ந்த வேறு கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஊரின் பொது மயானத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இந்த ஜகுழி வடக்கு நோக்கியபடி இருக்கும்படியாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவமற்ற கற்களை சிலைகளாக வைத்து வழிபாடு செய்கின்றனர். இவர்களது குலத்தெய்வ வழிபாட்டுத் தளத்தைப் போன்றே இங்கும் “எதிர்கல்” மரபு பின்பற்றப்படுகிறது. இந்த எதிர்கல்லினை “ஹட்டி சூரப்பா” என்கிறார்கள். இந்த “ஹட்டி சூரப்பா” அனைத்து வீரபத்திர கோயில்களிலும் அதன் பிரதான வாயிலுக்கு நேர்எதிரில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த குலவம்சத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையின் “காணும் பொங்கல் அதாவது கரிநாள்” அன்று இந்த ஜகுழியில் ஒன்று கூடி பொங்கலிட்டு, அபிசேகம் செய்து, தமது மூதாதையர்க்கு அவர்கள் அதிகமும் விரும்பி சாப்பிட்ட பதார்த்தங்களோடும் புது வேட்டி, துண்டு, சேலை முதலிய துணிமணிகளோடும் படையலிட்டு வழிபடும் முறையும் பின்பற்றப்படுகிறது.

ஆனால், பக்கத்து கிராமமான “ஏ.ஜெட்டிஹள்ளி” என்கிற கிராமத்தில் வசிக்கும் இதே குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த ஜகுழி மரபு முறையை காணமுடியவில்லை. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலஜங்கமணஹள்ளி கிராமத்தாருக்கு பெண் கொடுத்து அங்கிருந்து பெண் எடுக்கின்ற உறவுமுறை கொண்வர்கள்தான். 

ஆயினும் புதைப்பது எரிப்பது எதுவாயினும் ஊரின் பொது மயானத்தையே பயன்படுத்துகின்றனர். கிராமத்து முதியவர்களிடம் விசாரித்ததில் அந்த ஜகுழி முறை வழக்கொழிந்து விட்டதாகவும், தற்போது இங்கு யாரும் அந்த மரபினை பின்பற்றுவதில்லை எனவும் தெரிவித்தார்கள். 

பாலஜங்கமணஹள்ளி கிராமத்தில் நிரந்தரமாக குடியமர்ந்துவிட்ட சில குடும்பத்தினரைத் தவிர்த்து, தலைமுறைகளின் கிளை பிரிதலாலும், வாழ்வாதார இடப்பெயர்வினாலும் ஏற்பட்ட மாற்றத்தினால் சரியான முறையில் தற்போதைய தலைமுறையினரால் இந்த மரபுவழிமுறை பின்பற்றப்படுவதில்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்றுதான்.

நன்றி திரு. சாதனந்தம் கிருஷ்ணகுமார், பிரதாப ருத்ரன்

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!