கொங்கு மலைவாசிகள் என்ற நூலில் இருந்து குறும்பர் இன பழங்குடி மக்களின் பார்வை...

கொங்கு மலைவாசிகள் என்ற நூலில் இருந்து குறும்பர் இன பழங்குடி மக்களின் பார்வை...

நன்றி.திரு.மானிட இயல் அறிஞர் 
டாக்டர் பிலோ இருதயநாத்

குறும்பர்கள்


 நீலகிரி , மலபார் மைசூர் , வயல்நாடு முதலிய இடங்களில் வாழும் ஆதிவாசிகளாகிய இந்தக் குறும்பர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாகப் பல தகவல்கள் எழுதும்போது , நீலகிரியில் ஒவ்வொரு பாடியில் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது . அப்படி அவர்களிடம் தங்கும்போது பல பாடிகளில் பலர் பல விதமாகத் தங்கள் நடனப் பாடல்களைப் பாடிக்கொண்டு நடனமாடினர் . அப்பாடல்களை எல்லாம் எழுதி , ஒன்றாகச் சேர்த்துச் சிந்தனை செய்து பல புலவர்களிடம் காட்டிச் சேர்த்து ஆராயும்போது அதில் , “ கச்சியும் , மயிலையும் பல்லவர் ” என்ற சொற்கள் பலரிடம் பல இடங்களில் கொச்சையாகப் பாடப்படுவதைக் கண்டேன் . கடைசியில் பாடல்களைப் பிரித்துப் பார்க்கும்போது கலிங்கத்துப் பரணியில் இது கிடைத்தது .

 " பாடீரே ! பாடீரே ! பாடீரே ! பாடீரே ! வண்டை வளம்பதி பாடீரே மல்லையும் , கச்சியும் பாடீரே பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோற்றலைப் பாடீரே காட்டிய வேழவணி வாரிக் கலிங்கப் பரணி , நங்கா . வலனைச் சூட்டிய தோன்றலைப் பாடீரே தொண்டையர் வேந்தனைப் பாடீரே ” ( கலிங்கம் : - 520 - 22 )

 தக்கோலப் போரில் வெற்றி கொண்ட மூன்றாம் கிருஷ்ணதேவன் தொண்டை மண்டலத்தையும் , திருமுனைப்பாடி நாட்டின் வடபகுதியையும் ( குறும்பர்கள் இன்றும் தாங்கள் வாழும் ஊரைப் “ பாடி பாடி " என்றே அழைக்கின்றனர் ) வென்று தன் ஆளுகையில் வைத்துக்கொண்டான் . தான் வென்ற - நாடுகளைத் தன்னுடைய பிரதிநிதிகளாகிய சில தலைவர்களைக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான் . எனவே , அவன் “ கச்சியும் தஞ்சையுங்கொண்ட கன்னரதேவன் " என்று தன் கல்வெட்டுகளில் கூறிக்கொள்வதைப் பல ஊர்களில் காணலாம் . மேலே கூறியுள்ளவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு 12 - ஆம் நூற்றாண்டில் அரசாண்ட தொண்டைமான் பேரரசின் - வரலாறுகளையும் , அவனால் கட்டப்பட்ட “ கஜப்ருஷ்ட கோவில் ' கல்வெட்டுகளையும் ஆராய்ச்சி செய்யத் ஆரா தொடங்கினேன் . தென்னிந்தியாவில் மலைகளிலும் , காடுகளிலும் , காட்டுமிராண்டிகளாக இன்றும் மறைந்து வாழும் குறும்பர்களுக்கு அவர்கள் கட்டி வாழ்ந்த கோட்டைகள் தென்னிந்தியாவில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகக் குடி கொண்டிருந்தது . அவ்வண்ணமாகவே - எங்கு சென்றாலும் , அதைப்பற்றிய தகவல்கள் கிடைக்குமா என்று அலைந்த எனக்கு அண்மையில் ஒரு பெரியவரை இரயில் நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது . அவரிடம் பேசிக்கொண்டே வந்த பின் அவர் , “ நான் ரெட்ஹில்சுக்குப் போக வேண்டும் . பழைய காலத்தில் அங்கு குறும்பர் , கடம்பர் , கண்டர் என்ற ஒருவித முரடரானவர்கள் கோட்டை கட்டிக்கொண்டு மக்களைத் துன்பப்படுத்தி வாழ்ந்தார்கள் . அவர்களுடைய கோட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது . அத்தண்ணீரைத்தான் குழாயின் மூலம் சென்னை நகருக்கு அனுப்புகிறார்கள் . உங்களுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டியதாக இருந்தால் , வட திருமுல்லைவாயில் கோயிலின் கல்வெட்டுகளை ஆராய்ந்தால் குறும்பரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும் ” என்று கூறினார் . இதைக் கேள்விப்பட்டதும் , புகைப்படங்கள் எடுக்கவும் மற்றக் குறிப்புகள் எழுதவும் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு , திருமுல்லைக் கொடியாளைக் காணச்சென்றேன் . அப்போது பல எண்ணங்கள் என் உள்ளத்தில் உதயமாயின . இன்று தன - நாயக்கன் கோட்டையின் மேலும் , கோயிலின் மேலும் , பவானி அணைக்கட்டின் தண்ணீர் தேங்கி நிற்பதைப்போல் , அன்று குறும்பர்களின் கோட்டையின் மேலும் , இன்று ' ரெட்ஹில்ஸ் ' தண்ணீர்த் தேக்கம் இருக்கிறது போலும் என்று நானே என் ஐயத்தைச் சரிப்படுத்திக் கொண்டேன் . சென்னையிலிருந்து மேற்கே ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பத்தூர் இரயில் நிலையத்தில் இறங்கினேன் . அம்பத்தூரிலிருந்து 4 கிலோ மீட்டர் நடக்க வேண்டுமென்று கூறியதால் வேறு வழி இல்லாமல் நடக்கத் தொடங்கினேன் . சிறிது தொலை நடக்கும்போது ஒரு ஆங்கிலேயரின் கார் வருவதைக் கண்டு அதை நிறுத்தி , என்னை ஏற்றிக்கொள்ளும்படி கேட்டேன் . அன்னாரும் அதற்கு இசைந்தார் . காரில் போகும்போதே கோயிலின் கோபுரமும் , கோபுரத்தின் மேல் புறாக்கள் பறப்பதும் காட்சி அளித்தன . கோயிலுக்குப் போவதற்கு முன் வழியில் பெரிய பிள்ளையாரின் கோயிலொன்று கற்றூண் மண்டபத்துடன் இருக்கிறது .

வரலாற்றுச் சான்றுகள் 

சீர்காழிக்குக் கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்ற ' தென் திருமுல்லைவாயில் ' என்னும் கோயில் இருப்பதால் , இதற்கு “ வட திருமுல்லைவாயில் ' எனப்பெயரிடப் பட்டது . இதை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார் . இது பண்டையில் நீர் வளமும் , நில வளமும் பொருந்திய இயற்கைக் காட்சிகளை உடையதாகவும் , விலங்குகள் நிறைந்து வாழ்ந்த இடமாகவும் இருந்தது . மனிதர்கள் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் ஆதிகாலம் தொட்டே இவ்வூரில் இருந்ததால் , அன்று முதல் இவ்வூரில் மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல ஆதாரங்களும் இருக்கின்றன . தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக இனிது விளங்குவது இத்திருமுல்லைவாயில் . பண்டைக் காலத்தில் நாடாண்ட பல வேந்தர்களும் , புணியாற்றிய பல தலைவர்களும் , இங்குப் பல கோட்டைகளையும் , ஆலயங்களையும் அமைத்துப் பெரும் பயன் அடைந்தார்கள் . இத்தலம் கிருதயுகத்தில் “ இரத்தினபுரம் ” என்றும் , திரேதா யுகத்தில் “ பில் வரண்யம் ” என்றும் , துவாபர யுகத்தில் " சண்பகாரண்யா ” என்றும் , கலியுகத்தில் “ மாலதிவனம் ” என்றும் , ஒவ்வொருயுகத்தில் ஒவ்வொரு பெயருடன் விளங்கியதாகத் தெரிகின்றது .

 குறும்பர்களுடன் போர்

 சென்னை , வட ஆற்காடு , சித்தூர் , செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களை ஒருங்கு சேர்த்துத் தொண்டை மண்டலம் என்ற பெயரில் தொண்டைமான் அரசு புரிந்து வந்தான் . தொண்டைமான் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவன் . அவன் திருவல்லிக்கேணியிலிருந்து திருமுல்லைவாயில் உட்பட திருப்பதி வரையிலுமுள்ள கோயில்களில் சிலவற்றைப் புதியதாகக் கட்டியும் , சிலவற்றைப் 
சீர்திருத்தியும் , கோவிலைத் திருத்தொண்டு செய்தான் . இத்தகைய தொண்டைமான் ஒருமுறை குறும்பர் , கண்டர் , கடம்பர் என்பவர்களோடு சண்டை செய்து தோற்று தன் யானையின் மேல் ஏறிக்கொண்டு உயிர் தப்பி ஓடிவந்த பொழுது , இத்தலத்தில் அடர்ந்திருந்த முல்லைக் கொடிகள் யானையின் காலில் சுற்றிக் கொண்டு தடைப்படுத்தின . உடனே தொண்டைமான் அக்கொடைகளைத் தன் வாளினால் வெட்டினான் . வெட்டிய இடத்திலிருந்து குருதி பெருகுவதைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விட்டான் . கொடிகளைப் புரட்டிப் பார்த்தான் . கீழே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான் . அதன் உச்சியில் தன் வாளின் வடுவினைக் கண்டான் . நடுநடுங்கிக் கீழே விழுந்தான் . அதனைக் கண்ட சிவபெருமான் , “ வருந்தாதே ! எனக்கொன்றும் , யாராலும் தீங்கு செய்ய முடியாது . நான் மாசிலாமணி . நந்தி தேவரை அனுப்பி உன் எதிரிகளை அழிக்கிறேன் " என்று கூறி நந்தியை அனுப்பி குறும்பர் , கண்டர் , கடம்பர் முதலிய எதிரிகளை அழித்தார் . ஆகையால் தான் இத்தலத்திலிருக்கும் நந்தி , மற்ற கோவில் களிலிருக்கும் நந்தியைப் போல் அல்லாமல் சிவலிங்கத்தினை நேர்முகமாகக் காணாது எதிர் முகமாகத் திரும்பி இருக்கும் காட்சியை இன்றைக்கும் காணலாம் . அதை விளக்க :

 “ ஆலயங் காவல் சூழ் அருள் நந்தி தன்னைச் சாலவே தொண்டைமான் பின்னுடன் துணைபோய் மேவிய ஜெயத்துடன் விரைந்து வாவெனக் காவல் - சூழ் நந்தி கணமதில் சென்று வாணனும் , ஞணனும் மயங்கவே ஜெயித்துத் தாணிவின் பதந்தனில் சரண் என வணங்கினான் ” - 

இப்பழம் பாடல் நன்றாக விளக்கம் தருகிறது . தொண்டைமானும் மிக மகிழ்ந்து கோவில் குளம் முதலிய பணிகளைச் செய்தான் . குறும்பர் , கடம்பர் ,  கண்டர் இவர்கள் பூஜித்து வந்த பைரவ மூர்த்தியின் சிலையைக் கொண்டு வந்து தொண்டைமான் , இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு கூறுகிறது . அவர்களிடமிருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் இக்கோவிலினுள் காணலாம் . இறைவன் - நிர்மலமணீசுவரர் . அம்பிகை - கொடியிடை நாயகி . இக்கோவில் சிற்பங்களும் , உயரிய மதிற் சுவர்களும் உடையதாய் , ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது . ஊர் சிறியதாக இருந்தாலும் , இக்கோவிலின் புகழ் பெரியதாகவும் , பல விஷயங்கள் அடங்கியதாகவும் இருக்கிறது . இக்கோவில் , யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் இருப்பதால் , இது “ கஜ ப்ருஷ்ட ஆலயம் ” என்று கூறப்படுகிறது . இம்மாதிரியான கோவில்களை அமைக்கும் முறை தமிழ்நாட்டில் , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வழக்கத்திலிருந்தது . தமிழ் ' மொழியில் எழுதப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த சொற்றொடர்கள் அங்குக் காணப்படுகின்றன . ' அன்று இவ்விடங்களில் எல்லாம் வாழ்ந்த அந்தக் குறும்பர்கள் இன்று எங்கே ? ' என்ற கேள்வி உதயமாகிறதன்றோ ? போரில் நாட்டை இழந்த குறும்பர்கள் பல மலைக்காடுகளை அடைந்து பல ஊர் மொழிகளைக் கற்று வாழத்தொடங்கினர் . மேலும் வட ஆற்காட்டில் ஆரணிக்கு மேற்கே ஆறு மைல் தூரத்தில் “ படை வீடு ' என்ற நகரத்தை குறும்பர் குலத்தைச் சேர்ந்த அரசர்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர் . ஆனால் தொண்டைமான் குறும்பரை வென்று , அவர் படைவீட்டை அழித்தான் என்று வரலாறு கூறுகிறது . “ இன்று இவ்வூர் அழிந்து விட்டது ” என்று பலர் கூறுகின்றனர் . இன்றும் , சில குறும்பர்களின் வழிமரபினர் சில நகரங்களில் பல தொழில்கள் செய்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம் .


 பேசும் பாறைகள் 

மேலை நாட்டினர் தோலிலும் துணியிலும் எழுதி வைத்தனர் . ஆனால் தமிழனோ என்றும் அழிந்து போகாதவாறு , பாறைகளைக் கொண்டு அதில் எழுதி வைத்தான் . அப்பாறைகளே ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பேசும் பாறைகளாக மாறி இருக்கின்றன . அவைகளும் பேசாவிட்டால் இன்று தமிழனின் வரலாறு , தமிழனின் பண்பாடு முதலியவை அழிந்து போகுமன்றோ ? நாம் இதற்கு நம் மூதாதையர்களுக்குக் கோயில் கட்டி அல்லவோ வணங்க வேண்டும் ! - இத்திருக்கோயிலில் மொத்தம் இருபத்து மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன . அவற்றில் சில கோயிலுக்கு ஆடுகள் கொடுத்ததையும் , நிலங்கள் கொடுத்ததையும் , அரசர்கள் செய்த தொண்டுகளையும் - இன்று எடுத்துரைக்கின்றன . அதில் கி . பி . 975 - ல் உள்ள ஒரு கல்வெட்டு உத்தமச் சோழ அரசனைப் பற்றியும் , மண்டபம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதையும் , சோழர் மரபில் வந்த குலோத்துங்கன் , இராஜராஜன் , விஜயநகரத்துப் புக்கராயன் , ஜடாவர்ம சுந்தர பாண்டியன் முதலியவர் களின் பெயர்களையும் , சுந்தரமூர்த்தி நாயனார் இக்கோயிலில் வந்து இறைவனைப் பாடிப் புகழ்ந்ததையும் இறைவன் தொண்டைமானுக்கு நந்தியின் மூலம் அருள் புரிந்ததையும் விளக்குகின்றது . . . ஹைதர் அலி சென்னையின் மேல் படை எடுத்தபொழுது அது மிக அழிவுற்றது . 1805 - ஆம் ஆண்டு முதற்கொண்டு இது பழைய நிலையையடைந்து வருகிறது . இவ்வாலயத்தின் கல்வெட்டு பண்டைச் காலத்தில் குறும்பர்களும் , கண்டர்களும் , கடம்பர்களும் சென்னைக்கு அருகில் கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள் என்றும் , தொண்டைமான் நந்தியின் உதவியால் அவர்களின் கோட்ைையயும் அழித்து , அவர்களையும் காடுகளுக்குத் துரத்தி இருக்க வேண்டும் என்றும் திண்ணமாக எடுத்துக்காட்டுகிறது .

குறிப்பு நூல்:

கொங்கு மலைவாசிகள் ( பயண ஆராய்ச்சி நூல் ) 

 மானிட இயல் அறிஞர் 
டாக்டர் பிலோ இருதயநாத் 

தென்றல் நிலையம் , 1ad , மேலசன்னதி சிதம்பரம் - 608001 . 

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!