குறும்பர் இன மக்களின் கம்பளி நெசவுத் தொழில்

 குறும்பர் இன மக்களின் கம்பளி நெசவுத் தொழில்


 ஆடு மேய்ப்பதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குறும்பர் பழங்குடியின மக்கள் ஆட்டுமுடியிலிருந்து தங்களை இரவு நேரங்களில் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் , மழைக்காலங்களில் காத்துகொள்ளவும் தேவையான கம்பளியை நெய்து கொள்கின்றனர் . ஆட்டின் முடியை வெட்டி , அதனை நூலாகத் திரித்து எப்படிக் கம்பளியாக நெசவு செய்கின்றனர் என்பது குறும்பர் பழங்குடி மக்களுக்கே உரிய தனித்தன்மையாகும் . 

ஆட்டுக்குப் பூஜை செய்தல் ( உன்ன கசு ஹப்பா ) 

தங்கள் செல்வமான ஆடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஆடி அல்லது ஆனி மாதங்களில் பூசை செய்து கம்பளி நெய்யத் தேவையான ஆட்டில் உரோமத்தினைச் சேகரிப்பர் . ஆடுகளுடன் இவர்கள் வாழ்கின்ற காரணத்தால் ஆடுகளுக்கு முடி எப்பொழுது முதிர்ச்சியடையும் என்று அறிந்து வைத்திருக்கின்றனர் . வெட்டாமல் விடப்படும் முடியானது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் . எனவே ஆடுகளுக்குப் பூசை செய்து வழிபட்டு உரோமத்தைச் சேகரிக்கின்றனர் . ஆடுகளுக்குச் செய்யப்படும் பூசை இறைவனுக்குச் செய்யப்படும் பூசைக்கு ஒப்பானது ஆகும் .

குறும்பர் பழங்குடியினரில் இளவயதுக்காரன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்கச் செய்வார்கள் . முதல் நாளே பூசைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிவைத்துக்கொள்வார்கள் . இரவில்தான் ஆட்டுக்குப் பூசை செய்வார்கள் . தாரை , தப்பட்டை முழங்க , பெணாய் என்ற மூங்கில் குழாயில் ஆட்டுபால் பழம் வைத்து வணங்கி குலோலா சொல்லிக் கூக்குரலிட்டு இறைவனை அழைப்பார்கள் . உபவாசம் இருந்தவனுக்கு அருள்வந்து முட்டிப்போட்டுக் கொண்டு ஆட்டைநோக்கிக் கையை நீட்டுவான் . உடனடியாக அங்கு அவனது தலையில் தேங்காய் உடைப்பார்கள் . பின்பு இறைவன் ஒருவன் உடலில் புகுந்து பேசுவான் . அருள் வந்தவனிடம் பூசை திருப்தியா , இல்லை ஏதேனும் குறை உள்ளதா என்று கேட்டுப் பூசையை முடிப்பார்கள் . பின்பு வீட்டிற்குச் செல்வார்கள் . இதில் யார் தலைமீது தேங்காயை உடைக்கிறோமோ அவர்களுக்குத்தான் அந்தத் தேங்காய் சொந்தம் . அந்தத் தேங்காயை அந்தக் குடும்பத்தினர் தவிர வேறுயாரும் சாப்பிட மாட்டார்கள் . 

ஆட்டினைத் தூய்மை செய்தல் 

ஆட்டிற்கு முடிவெட்டுவதற்கு முன்பு ஆட்டினைச் சுத்தம் செய்வர் . ஆடு சாணம் போன்றவற்றில் படுத்திருப்பதால் அதைச் சுத்தம் செய்யும் பணி , முதலாவது பணியாகத் தொடங்கும் . ஆடு மேய்க்கும் இடங்களுக்கு மத்தியில் கிணறு , ஏரி , குளம் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று ஆட்டினைத் தூக்கித் தண்ணீரில் எறிவர் . ஆடு நீந்திக் கரைக்கு வரும் . மீண்டும் ஆட்டினைத் தூக்கித் தண்ணீரில் எறிவர் . இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் . இதன் மூலம் ஆட்டின் முடியில் ஒட்டியிருக்கும் ஆட்டுச்சாணம் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நீங்கித் தூய்மையாகும் . சக ஆட்டினைக் குளிப்பாட்டுவதும் உண்டு . ஆட்டின் மூடியில் உள்ள தண்ணீர் முற்றிலும் காயும்வரை விட்டுவிடுவார்கள் ஆட்டின் முடி உலர்ந்தபின் தூய்மையாகவும் , ஒன்றும் ஒன்று சிக்கிக் கொள்ளாமலும் இருக்கும் . இது உரோமம் வெட்டுவதற்கு வசதியாக அமையும் . 


 கத்திரி 

பூசை முடிந்த மூன்றாம் நாள் ஊருக்கு வெளியே ஓர் இடத்தில் கம்பளி போட்டு உட்கார்ந்து கொண்டு ஆட்டு ரோமத்தைக் கத்தரித்து எடுப்பார்கள் . ஆட்டு உரோமம் எடுப்பதில் திறமை வாய்ந்தவர்களும் உண்டு . அவர்களைப் பிரத்யேகமாக இதற்காகப் பல ஊர்களில் இருந்து அழைத்து வந்து உரோமம் எடுப்பார்கள் . இவர்கள் பயன்படுத்தும் கத்திரி வித்தியாசமான அமைப்பினை கொண்டது . இக்கத்திரி ஆங்கில எழுத்து " V " போன்று காணப்படும் . வெட்டும் விளம்பு கூர்மையாகவும் , மற்ற பகுதி , கத்தியைப் போன்றும் இருக்கும் . ஆனால் இரண்டு வெட்டும் பகுதிகளும் ஒரே இரும்புத் தகட்டில் உருவாக்கப்பட்டுள்ளது . ஒரே தகட்டினை வளைத்துச் செய்யப்பட்டுள்ளதால் வெட்டும்போது தானாகவே இரண்டு பக்கங்களும் தனித்தனியாகவும் , வெட்டுவதற்கு எளிதாகவும் வந்துவிடும் . முதலில் ஆட்டைப் படுக்கவைத்து அதனைப் பிடித்துப் பின்னர் உரோமத்தை வெட்டுவர் . ஆட்டைச் சுத்தம் செய்தல் , முடி வெட்டுதல் போன்ற வேலைகளை மட்டுமே ஆண்கள் செய்கின்றனர் . மற்ற வேலைகளைப் பெண்கள் செய்கின்றனர் . 


குறும்பர் பெண்கள்:

ஆட்டுமந்தைகளைப் பாதுகாத்து . அவ்விடத்தைப் பெருக்கி வளம் சேர்ப்பது ஆண்கள் தொழில் , கத்தரிக்க உரோமங்களைக் கம்பளியாக்குவது பெண்களின் கடமையாகும் . இதில் பெண்களின் பங்கே முதன்மையானது . கம்பளி நெய்யும் பெண்கள் இரண்டு வகையாக வேலை செய்கின்றனர் . சிலர் ஆட்டு முடியிலிருந்து நூல் நூற்கும் பணியை மட்டும் செய்வார்கள் . சிலர் தறியைக் கொண்டு கம்பளியை மட்டும் நெய்வார்கள் . நூலைத் தயாரிப்பவர்கள் நெய்பவர்களிடம் கொடுத்துக் கம்பளியை நெய்து வாங்குவார்கள் . அதற்குக் கூலியாக என்ன கேட்கின்றார்களோ அதைக் கொடுப்பார்கள் . இதைப் போன்று , தறியை வைத்திருப்பவர்களும் நூலை விலைக்கு வாங்கிக் கம்பளியை நெசவு செய்து மற்றவர்களுக்கு விற்பார்கள் . தற்பொழுது கம்பளி நெசவுத் தொழில் குறைந்து வருகின்றது . 

கத்தரித் உரோமங்களைக் கோணிப்பையில் எடுத்துக் கொண்டு வீட்டிக்க வந்து நடுவீட்டில் வைத்து அன்று இரவு படையல் போட்டு அதற்குப் பாவார்கள் . மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து 
அந்த மூட்டையை  பிரித்துக் கம்பளி நெய்வார்கள் . கருப்பு முடியினை அதிகம் பயன்படுத்துவர் . 
வெள்ளை முடியினை கொஞ்சமாகப் பயன்படுத்துவர் . 

வெள்ளை னை ஓரப் ( பார்டர் ) பகுதிக்கு மட்டுமே பயன்படுத்துவர் ஆட்டின்  முடியில் உள்ள சிக்குகளை எடுப்பதற்கு ஒரு வில்லைப் பயன்படுத்துகின்றனர் . வில்லில் நாண் கயிறு எனப்படும் கயிறினை இரண்டு கயிறுகளாகக் கட்டி உள்ளனர் . ஆட்டின் முடியை ஓர் இடத்தில் குவித்து வைப்பர் .

 வில்லில் அம்பை ஏற்றிவிடுதைப் போன்று நாண் கயிரை மட்டும் இழுத்து , இழுத்து விடுவார்கள் . வில்லிலுள்ள கயிற்றின் மேல் ஆட்டின் முடி குவிக்கப்பட்டிருக்கும் . முடியின் மேல் வில்லின் கயிற்றை இழுத்துப் பலமுறை விடும்போது கயிற்றின் வேகத்தில் ஆட்டின் முடியிலுள்ள சிக்குகள் இன்றி பிரிக்கும் பணியைச் செய்வார் . தற்போது ஆட்டின்முடி நூல் நூற்க ஏற்றதாக மாற்றப்பட்டுவிடும் . 

கம்பளி நூல் தயாரிக்கும் கதிர் 

குறும்பர் பழங்குடியின மக்கள் நூல் நூற்கப் பயன்படுத்தும் கதிர் என்ற நூல் நூற்கும் கருவி பழங்காலத்தில் மக்கள் துணி நெய்யப் பயன்படும் . நூலினை நூற்கும் கருவியை ஒத்திருக்கிறது . இக்கருவிகள் அகழ்வாராய்ச்சி யின்பொழுது தமிழகத்தில் கிடைத்துள்ளன . தொல்குடிகளில் வழிவந்தர்களாக குறும்பர் பழங்குடியினர் அக்கருவியை இன்னும் பயன்படுத்திவருகின்றனர் . 

கம்பளி நூல் நூற்கும் கருவி பஞ்சுநூல் நூற்கும் கருவியை விடச் சற்றுப் பெரியது . இக்கதிர் என்னும் கருவி மரத்தால் செய்யப்படுகிறது . தயிர் கடையும் மத்தினைப் போல் இருந்தாலும் கீழ்ப் பகுதியில் நன்று சுற்றுவதற்கு ஏதுவாக இரும்பு அல்லது மரத்தால் ஆணியை போன்ற நீண்ட வடிவம் சுமார் 3அல்லது 4 அங்குலம் நீளத்தில் இணைக்கப்பட்டிருக்கும்..

கரட்டை 

கரட்டை என்பது நூல்நூற்கப் பயன்படும் . கதிர் நின்று சுற்றுவதற்குப் பயன்படும் சாதனம் . மாட்டுச் சாணத்தை உருண்டையாகச் செய்து , அதன்மேல் பகுதியில் தேங்காய் ஒட்டின் மேல் மூடியை காலத்து அழுத்திச் சாணத்தின் உள்ளே செல்லுமாறு வைப்பார்கள் . சாணமும் , தேங்காய் மூடியின் மேல் பகுதியில் சரியாக இருக்குமாறு செய்து அதை வெயிலில் உலர வைப்பார்கள் . சாணம் உலந்தபின் முடியை நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் . கரட்டையிலுள்ள தேங்காய் மூடியின் உட்பகுதியில் கதிர் எனப்படும் நூல் நூற்கும் கதிரின் அடிப்பகுதியின் நுனியை வைப்பார்கள் , 

 நூல் நூற்கும் கதிரின் கீழ்ப்பகுதியிலிள்ள வட்டவடிவக் கட்டையின் மேல் ஆட்டு ரோமத்தினைச் சிறிது நூலாகத் திரித்து அதை அதில் சுற்றுவார்கள் . கதிரின் அடிப்பகுதி , காட்டை எனப்படும் தேங்காயின் முடியில் இருக்கும் . கதிரின் மேல் பகுதி நூல் நூற்கும் பெண்ணின் கையிலிருக்கும் . கம்பளி நூலை ஒரு கையில் பிடித்தவாறு , மற்றொரு கையில் உள்ள கதிரின் நுனியைத் தன்னுடைய காலின் மேல்பகுதியில் வைத்துக் ( தொடையில் ) கதிரைச் சுற்றிக் கழல விடுவார்கள் . காலில் சற்றும் , திரிப்பது போன்று

நூற்கும் கதிரைச் சுழல விடுவதால் கதிர் வேகமாகச் சுற்றும் . கதிர் வேகமாகச் சுற்றுவதால் கம்பளி நூல் முறுக்கேறி நாலின் வடிவத்தை அடையும் . கதிரின் கீழ் நுனி பாகம் காட்டையிலுள்ள தேங்காயின் மேல் மூடியுள்ள ( கரட்டை ) , கதிர் சுற்றுவதற்கு ஏதுவாகத் தற்காலத்தில் சக்கரங்கள் சுற்றுவதற்குப் பயன்படும் பேரிங் " போன்று பயன்படுகின்றது . கதிர் சுற்றும்பொழுது கம்பளி நூல் ஒரே அளவுடையதாக வருவதற்கு ஆட்டு ரோமத்தைச் சரிசெய்து கொடுக்கும் . இந்த நூலில் ஓர் இடம் சிறியதாக அல்லது பெரியதாக இருந்தால் குறைந்த இடத்தில் சிறிது ரோமத்தைச் சேர்த்து , நூல் ஒரே அளவில் இருக்குமாறு செய்வார்கள் . இதனால் நூலின் அளவு ஒரே அளவுடையதாக இருக்கும் . 

இவ்வாறு தயாரிக்கப்பட்ட நூல் ஒரு குறிப்பிட்ட அளவு நீளம் வந்தவுடன் அந்த நூலைக் கதிரின் கீழ்ப்பகுதியில் வட்டவடிவ மரத்தின் அருகில் சுற்றுவார்கள் . இதைப்போன்று பலமுறை நூலைச் சுற்றியபின் தனியாக , நூல் உருண்டையாக மாறும் இதற்கு " சிம்பம் " என்று பெயர் . ஒரு கம்பளிக்குத் தேவையான நூலை இதைப்போன்ற முறையிலேயே பல சிம்பங்கள் அல்லது நூல் உருண்டைகளாக மாற்றிச் சேகரிப்பர் . இத்துடன் நூல் நூற்கும் பணி முடிவடைகின்றது . 


தறி 

தேவையான அளவு கம்பளி நூலை நூற்றபின் அந்த நூலை அணி செய்தல் என்ற முறையில் நூலைச் செவ்வக வடிவத்தில் மரக்குச்சிகளை நட்டு அதில் கட்டுவார்கள் . சுமார் இரண்டு அடி அகலத்திற்கு இரண்டு குச்சிகள் முன் பகுதியிலும் , பின்பகுதியிலுமாக இரண்டு குச்சிகளும் நடப்படும் . இந்த இரண்டு குச்சிகளுக்கு இடையில் சுமார் 6 அடி நீளம் இருக்கும் . மையப்பகுதியிலும் இரண்டு குச்சிகள் நடப்படும் . இந்தக் குச்சிகளுக்கு இடையில் கம்பளி நூலைச் செவ்வக வடிவில் சுற்றுவார்கள் . அது பெரிய தறியில் இணைத்துக் கம்பளி நூற்பதற்கு முன் தறியைப் போன்று சிறிய அளவில் நூலைக் கட்டுவார்கள் . 

இதை அணி சேர்த்தல் என்று கூறுகின்றனர் . இது நேரடியாகப் பெரிய தறியில் கம்பளியுடன் நூலைக் கட்டுவதற்கு முன்பு நூலைப் பண்படுத்தும் முறையாகும் . 

பெரிய தறி என்பது இரண்டு முழம் அகலமும் ஆறு முழம் நீளமும் கொண்டது . பொதுவாக இந்த அகலத்திலும் , நீளத்திலும் தறியை அமைப்பது காலந்தோறும் இருந்துவரும் வழக்கமாகும் . சிறிய அளவில் இருந்தாலும் பருத்தி , பட்டுநூல் தறியைப் போன்ற அமைப்புடையது . கம்பளித் தறி சிறிய அளவில் உள்ளதால் பெரிய வசதியும் இடமும் தேவையில்லை . வீட்டின் முன் உள்ள சிறிய இடமே போதுமானது . நீளவாக்கில் கம்பளி நூலை 6 அடி நீளத்தில் இரண்டு புறங்களிலும் , மேலும் கீழும் சுற்றுவார்கள் . ஒருபுறம் வில்லைப் போன்ற அமைப்பில் நூலைக் கட்டி உள்ளனர் . கம்பளி நெய்யும் பக்கமுள்ள கட்டையானது சற்றுப் பெரியதாக இருக்கும் . மற்றவை இதைவிடச் சிறியன . இந்தக் கட்டையைப் பேவு ' என்று கூறுகின்றனர் . இந்த மரத்தை இவர்கள் புனிதமாகக் கருதுகின்றனர் . திருமணத்தின் போது இந்த மரக்கட்டையின் மேல்பகுதியை மணவறையாகப் பயன்படுத்துவர் . அதாவது மரக்கட்டையின் மேல் மஞ்சள் நிறத் துணியைப் போட்டு அதன்மேல் மணமக்களை அமரச் செய்வார்கள்..

 கம்பளியின் நூல் போல்பகுதியில் ஒரு வரிசையும் கீழ்ப்பகுதியில் ஒரு வரிசையும் இருக்கும் . இந்த இரண்டு நூல் வரிசையின் இடைப்பட்ட பகுதியில் நூலைச் சேர்த்து அல்லது உருண்டையான நாழி எனப்படும் மூங்கில் இதனிடையில் சென்றுவிடும் . இந்த நாழியில் நூலைச் சேர்த்து வைத்திருப்பர் , நாழி என்பது நீளமாகக் கட்டப்பட்டுள்ள நூலில் செல்லுபோது மேல் பகுதியில் ஒருமுறையும் கீழ்ப்பகுதியில் ஒரு முறையும் குறுக்காகச் செல்வதால் குறுக்கிலும் , நெடுக்கிலும் நூல்கள் இணைகின்றன . குறுக்கிலும் நெடுக்கிலும் கம்பளி நூல் பின்னி நெருக்கமாகச் சேர்ந்து கம்பளி நூல் மேலும் இறுக்கி கம்பளியின் முழுமையான வடிவத்தை வந்தடையும் . குறிப்பிட்ட நீளம் நெய்தபின் அந்தக் கம்பளியைச் சுற்றி வைப்பார்கள் . இதைப்போன்று சிறிது , சிறிதாக நெய்து அதைச் சுற்றி வைப்பார்கள் . சுமார் 6 அடி நீளம் நெய்த இரண்டு பகுதிகளை இணைத்துக் கம்பளியைச் சேர்ப்பார்கள் . இப்பொழுது முழுமையான கம்பளியாக வந்தடையும் . 

நாழி எனப்படும் நூலைச் சேர்த்து வைத்திருக்கும் மூங்கிலைப் போன்ற உருண்டையான கட்டை , நீளமாகக் கட்டப்பட்டுள்ள நூலின் இடையில் செல்லும்போது மேல்பக்கம் ஒரு முறையும் , கீழ்ப்பக்கம் ஒருமுறையும் செல்வதால் கம்பளியில் பின்னல் போன்ற அமைப்பு ஏற்படும் . இவ்வாறு சென்ற பின்னர் நூலிலை ஒன்றாக இணைக்க அல்லது இறுக்க ஆசு கூட்டுதல் எனப்படும் முறை செய்யப்படுகின்றது . ஒரு நீண்ட பட்டையான மரப்பலகையைக் கொண்டு நூலை இறுகச் செய்வதால் கம்பளியின் நூல் நெருக்கம் அடையும் . இதைப்போன்று இரண்டு முறை செய்ய இரண்டு கம்பளிகளும் ஒன்றாக இணைக்கப்படும் . இரண்டு கம்பளிகள் இணைவதால் மொத்தமாக 4 முழம் அகலமும் 12 முழம் நீளமும் உள்ள பெரிய கம்பளி தயாரிக்கப்படுகின்றது . 

புளியங்கூழ் 

புளியங்கூழ் பழங்கால மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு பெற்றுள்ளது . 

புளியங்கூழ் தயாரிப்பதும் ஒரு வகையான தொழில்நுட்பம் , முதலில் புளியங்கொட்டையே வறுத்து , அதன்மேல் உள்ள கரு ஒட்டை நீக்கிவிடுவார்கள் . பின்னர் புளியங்கொட்டை நன்கு ஊறவைப்பார்கள் . ஊறிய புளியங்கொட்டையை ஆட்டு உரலில் போட்டு ஆட்டிய பிறகு அதனைக் கொதிக்கவைத்துக் கஞ்சி காய்ச்சுவர் . பெரிய தறியில் கட்டப்பட்டுள்ள கம்பளி நூலின் மேல் இந்தப் புளியங்கூழ் பூசப்படும் . இப்படிக் கம்பளி நூலின் மீது பூசுவதால் நூல் நெளிவு , சுளிவு இன்றி கம்பியைப் போன்று நேராக இருக்கும் . வீட்டு உபயோகப் பொருட்களான கூடை , முறம் போன்றவற்றின் மேல்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் இக்கூழைப் பூசுவார் . இக்கூழ் கூடையில் உள்ள சிறிய துவாரங்களை மூடிவிடும் . சிறிய தானியங்கள் , மாவு போன்ற பொருட்களை இத்தகைய மூங்கில் கூடைகளில் சேர்த்து வைக்கப் புளியங்கூழ் பயன்படுகிறது . கம்பளி , நூலில் ஒன்றுடன் ஒன்று இணைவதுடன் கம்பியைப் போன்று இறுக்கமாகவும் மாறும் . நெய்த கம்பளிகளைச் சந்தையில் மலையாளி உள்ளிட்ட பழங்குடியினருக்கு விற்பனை செய்வார்கள் . 

கம்பளி நெய்யும் தொழில் எல்லாக் கிராமங்களிலும் இல்லை . 

மாடப்பள்ளி கிராமம் தான் புகழ்பெற்றது.

 கம்பளி நெய்வதிலும் பலவித வேலைப்பாடுகள் கொண்டு நெய்வார்கள் . பாணால் கம்பளி என்கிற கம்பளி மிகவும் விலையுயர்ந்த கம்பளியாகும் . இதில் கறுப்பு வெள்ளை நூலை இணைத்து , கட்டம் வரும்படி நெய்வார்கள் . கறுப்புக் கம்பளி , நரைக் கம்பளி என்று பிரிப்பார்கள் . 

கம்பளி நெய்யும் பழக்கம் குறும்பர் பழங்குடியினருக்கு மட்டும்தான் தெரியும் . 
வேறுயாருக்கும் தெரியாது என்பதே உண்மை .




Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!