பதிற்றுப்பத்து - பதிகம் தரும் குறும்பர் இன மக்களின் மன்னன் கழுவுள் செய்திகள்

பதிற்றுப்பத்து - பதிகம் தரும் குறும்பர் இன மக்களின் மன்னன் கழுவுள் செய்திகள்

1. குறுந்தாண் ஞாயில்

புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
 20அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஆர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி

13 - 24. ஏறொடு.................ஊழி.

உரை : ஆன்பயம்   வாழ்நர்  -  ஆன்பயன்  கொண்டு  வாழும்
குறும்பர்கள்  ;  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ  -  ஏறுகளுடன்
கன்றுகளையுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால் ; புலவுவில்
இளையர்  -  புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின்வீரர் ;
புகல்  சிறந்து  -  அவர்  பால் விருப்பம் மிக்கு ; அங்கை விடுப்ப -
தாம்  கைப்பற்றிய  ஆனிரைகளையும்  விட்டொழிய  ; மத்துக் கயிறு
ஆடா  வைகற்பொழுது  -  தயிர் கடையும் மத்தினிடத்தே கயிறாடாத
விடியற்போதின்கண்  ;  நினையூஉ  நின்னைப்  புகலடைய நினைந்து
போந்து  ; கழுவுள் தலை மடங்க கழுவுளென்னும் குறும்பர் தலைவன்
தலைவணங்கி  நின்றதனால்  ;  பதி  பாழாக  வேறு புலம் படர்ந்து -
ஊர்கள் பலவும் பாழ்படும்படியாகப் பகைவர் நாடு நோக்கிச்  சென்று ;
விருந்தின்    வாழ்க்கையொடு    -   புதுவருவாய்கொண்டு   இனிது
வாழ்தற்கேதுவாகிய  செல்வத்தோடு  ;  பெருந்  திரு அற்றென - தம்
முன்னோர்         ஈட்டி       வைத்த        பெருஞ்செல்வமும்
இனிக்கெட்டதென்றெண்ணி  ;  அருஞ்சமத்து  அருநிலை  தாங்கிய -
கடத்தற்கரிய  போரின்கண்  தடுத்தற்கரிய  போர்நிலையைத் தடுத்துச்
சிறந்த   ;  புகர்  நுதல்  பெருங்  களிற்று  யானையொடு  -  புள்ளி
பொருந்திய  நெற்றியினையுடைய  பெரிய  களிற்றியானைகளையும்  ;
அருங்கலம்   தரா   அர்  பெரிய  அணிகலன்களையும்  திறையாகச்
செலுத்தாத பகைவேந்தர் ; மெய் பனி கூரா - உடல்நடுக்கம் மிகுந்து ;
அணங்கெனப்  பராவலின்  -  வருத்தக்கூடிய  தெய்வமென நின்னை
நினைந்து   பரவுவதால்   ;  பலிகொண்டு  பெயரும்  பாசம்போல -
தன்னால்   தாக்குண்டார்   உயிரைக்   கொள்ளாது   அவர்  இட்ட
பலியினைக் கொண்டு நீங்கும் பேய் போல ; திறைகொண்டு பெயர்தி -
அவர்  இடும்திறைகளைக்  கொண்டு  அவர்  உயிரை யளித்துவிட்டுத்
திரும்பி ஏகுகின்றாய் ; நின்  ஊழி வாழ்க - நினக்குத்   தெய்வத்தால்
வரையறுக்கப்பட்ட   வாழ்நாள்  முழுதும் இனிது வாழ்வாயாக எ - று.


கழுவுள்     என்பவன், குறும்பர் ஆயர் தலைவனாய்  ஏனை வேந்தருடன்
பெரும்பகை   கொண்டிருந்தான்  ;  அதனால்   அவனைப்  பிறரும்,
“பொரு   முரணெய்திய   கழுவுள்”   (பதிற்.  88)  என்றல்  காண்க.
அவனிருந்த  நகரை  முற்றி,  அவனுடைய  ஆரெயில் தோட்டியை நீ
வௌவிக்கொண்டமையின், அவன் அடைமதிற்பட்டுக் கிடப்ப, அவன்
கீழ்   வாழ்ந்த   குறும்பர்கள்   வேறு   புகல்காணாது   தம்முடைய
ஆனிரைகளைத்  தாமே கொணர்ந்து தந்து அருள் வேண்டி நின்றமை
தோன்ற,  “ஆன்பயம்  வாழ்நர்  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ”
என்றார்.   ஆனிரையான்   வரும்  பாற்பயன்கொண்டு  உயிர்வாழும்
இயல்பினராயினும்,  அவற்றைத்  தந்தேனும் நின் அருணிழல் வாழ்வு
பெறுதல்  வேண்டுமென  நினைந்தன ரென்பார், “ஆன்பயம் வாழ்நர்”
என்றும்  கூறினார்.  தம் உயிர்கொடுத்து அருள் வேண்டினர் என்பது
கருத்து  .  அதுகண்ட  நின்  வீரர்  தாம்  முன்பே போந்து வெட்சி
நெறியிற்   கைப்பற்றிய   அவர்   தம்   ஆனிரைகளை   அருளால்
வழங்கினமையின், “புகல் சிறந்து அங்கை விடுப்ப” என்றார்.  பகைவர்
தாம் உயிர்வாழ்தற் கேதுவாயவற்றைத் தாமே தந்து புறங்காட்டுதலினும்
சீரிய  வெற்றியின்மையின்,  “புகல்  சிறந்”  தென்றார்  .  இவ் வாயர்
முதற்கண்   தாம்   ஆளும்   ஆண்மையும்  உள்ளளவும்  பொருது
நின்றமை தோன்ற, வில்லேந்திய வீரர் சிறப்பை, “புலவு வில்லிளையர்”
என்றார்  .  பெருந்திரளான  மக்களைக்  கொன்றதனால்  வில்லேந்தி
அம்பு  தொடுக்கும் கைகள், குருதி தோய்ந்து புலவு நாறுதல் ஒருதலை
.  அம்பு தொடுத்து ஆயர்களைக் கொல்லாது அருள் செய்யும் சிறப்பு
நோக்கி,   “அங்கை”   யென்றார்   .  பகைத்துப்  பொருதார்  மேல்
கண்ணோடாது   அம்பு   செலுத்தும்  நெறிக்கு  இளமை  மேம்பட்டு
நிற்பினும்,  அஃது  அருளுடைமையால்  சால்புற்றிருந்தமை  விளங்க,
“இளையர்” என்றார்.

தன்    வீரராகிய ஆயர்களைப் பொருவது விட்டு ஆனிரைகளைத்
தந்து   நின்   அருள்   வாழ்வு   வேண்டியதறிந்த  கழுவுள்,  தான்
அவர்கட்குத்   தலைவனாகியும்   தலைமைப்   பணியினை  யாற்றும்
வலியின்மையால்   நாணிப்   பகற்போதிற்   போந்து   புகலடையாது
வைகறைக்கண்  வருதலை  நினைந்தா  னென்பார், “மத்துக் கயிறாடா
வைகற்  பொழுது நினையூஉ” என்றார் . வைகறைப்போதில் ஆய்மகள்
எழுந்து  தயிர்  கடைந்துகொண்டு, ஞாயிற்றின் வெயில் மிகுமுன் மாறி
வரவேண்டி   யிருத்தலின்,   வைகறை  யாமத்தின்  இறுதிக்காலத்தை
“மத்துக்கயி   றாடா   வைகற்  பொழுது”  என்றார்.  அக்  காலத்தே
இயங்குவோர்  உருவம்  ஓரளவு  இனிது தெரியும். பகற்போது வரற்கு
நாணமும்,  இருட்  போது வரின் காவலர் கொல்வரென்னும் அச்சமும்
வருத்துதலால்,    வைகறைப்பொழுது    கொள்ளப்பட்டது.   நினைவு
பிறந்தவழி,  செய்கை  பயனாதல்பற்றி, “நினையூஉ” என்றார். கழுவுள்
என்பான்  தன்  பெருமுரணழிந்து மானத்தால் தலை வணங்கி நிற்பது
வீரமாகாமையின்,   “தலை  மடங்க”  என்றார்.  வணங்கியது  கண்ட
துணையே,  அவன்பாற்  கொண்ட  பகைமை  நின்னுள்ளத்தினின்றும்
நீங்குதலின்,  வேறு  புலம்  நினைந்து  செல்குவையாயினை என்பார்,
“வேறு  புலம்  படர்ந்து”  என்றும், அச் செலவால் பகைவர் ஊர்கள்
அழிவது   ஒருதலை  யாதலின்,  “பதி  பாழாக”  என்றும்  கூறினார்.
படர்ந்து திறைகொண்டு பெயர்தி என வினைமுடிவு செய்க.


“வௌவினை யென்றது, வினையெச்சமுற்று. ஆயம் தரீஇ யென்றது
ஆயங்களை  நீ  புலவுவில்  இளையர்க்குக்  கொடுப்ப எ - று. தரீஇ
யென்பதனைத்   தர  வெனத்  திரிக்க.  இளையர்  அங்கை  விடுப்ப
என்றது,  இளையர்  அவ்  வாயத்தைத்  தங்கள்   அங்கையினின்றும்
பிறர்க்கு  விடுப்ப எ - று . கயிறாடா வென்னும் பெயரெச்ச மறையை
வைகலென்னும்  தொழிற்  பெயரொடு  முடிக்க.   வைகல்  - கழிதல்.
வைகற்பொழுது  ;  இருபெயரொட்டு.  வாழ்நர்  வாழ்பவர்,  குறும்பர்
பயத்தானென விரிக்க. கழுவுளாவான், அவ்குறும்பர்க்கு தலைவனாய்
அக்   காலத்துக்   குறும்பு   செய்திருந்  தானொருவன்  .  முன்னர்
எயிலென்றது,  அவன்  தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை,
வேறு    புலம்    பதி    பாழாகப்   படர்ந்தென்றது,   அக்கழுவுள்
தலைமடங்குகையாலே  அவனை  விட்டு, வேறு திறையிடாக் குறும்பர்
நாட்டிலே  அந்நாட்டுப்  பதி  பாழாகச்  சென்று  எ  -  று. படர்ந்து
திறைகொண்டு  பெயர்தி  யெனக்  கூட்டுக”  என்று பழையவுரைகாரர்
கூறுவர்.

இனி,    பகைவர் களிறும் கலனும் திறையாகத் தாரா தொழிந்ததற்
கேதுவாகிய   அவருடைய   பெருஞ்செல்வ   நிலையை,  “விருந்தின்
வாழ்க்கை  யொடு  பெருந்திரு”  என்றார் . விருந்து, ஈண்டுப் புதிதாக
ஈட்டப் பெறும் செல்வத்தின் மேற்று ; அச் செல்வத்தின் பயன்  இன்ப
வாழ்க்கை  யென்ப  . பெருந் திரு, முன்னோர் ஈட்டிவைத்துச்  சென்ற
பெருஞ்  செல்வம்  ;  “பெருஞ் செல்வம்” (குறள். 1000) என்பதற்குப்
பரிமேலழகரும்  இவ்வாறு  கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர்,
விருந்தின்   வாழ்க்கை   யாவது   “நாடோறும்  புதிதாகத்  தாங்கள்
தேடுகின்ற  பொருள்”  என்றும், “பெருந்திரு, முன்னே தேடிக் கிடந்த
பொருள்” என்றும் கூறுவர்.

பதி  பாழாக வேறு புலமாகிய தம் நாடு நோக்கி நீ வருவது கண்ட
நின்  பகைவர்தம்  வாழ்க்கையும்  திருவும் அழிந்தன வென்று கருதி
உளமும்   உடலும்   ஒருங்கு   நடுங்கின   ரென்பார்,   “விருந்தின்
வாழ்க்கையொடு  பெருந்திரு  அற்றென  மெய்பனி  கூரா”  என்றார்,
பழையவுரைகாரர்,    “அற்றென   வென்றது,   அற்றதெனக்   கருதி
யென்றவாறு”  என்றும், “அற்ற தென்பது கடைக் குறைந்த” தென்றும்
கூறுவர்.

அருஞ்     சமத்து அருநிலை யென்றது, கடும்போர் நிகழுமிடத்து
வெல்லுதல்  அரிதென்னுமாறு  இருதிறத்து  வீரரும் மண்டிப் பொரும்
நிலைமையாகும்.  அந்  நிலைமைக்கண்  அஞ்சாது  நின்ற  பகைவர்
முன்னேறாவாறு   தகைந்து  வெல்லும்  போர்த்தகுதி  பெற்ற  களிறு
என்றற்கு இவ்வாறு சிறப்பித்தார் என அறிக. திறைசெலுத்தும் வேந்தர்
இத்தகைய     களிறுகளையும்     உயரிய     அணிகலன்களையும்
தருவரென்பதனை,  “ஒளிறுவாள்  வயவேந்தர்,  களிறொடு கலந்தந்து,
தொன்று  மொழிந்து  தொழில்  கேட்ப”  (பதிற்.  90) என்று பிறரும்
கூறுமாற்றானறிக  .  அருங்கலந் தாராத பகைவ ரென்னாது “தராஅர்”
எனத்  தொழில்மேல் வைத்தோதியது . தாராமைக் கேதுவாய பகைமை
நீங்கித்  தருதற்  கேதுவாகிய அச்சமுண்மை புலப்படுத்தற்கு, பகைவர்
தம்முடைய    ஆண்மை,    அறிவு,    பொருள்,   படை  முதலிய
வலிவகையைக்  கடந்து  மேம்பட்டு  நிற்றல்பற்றி  நின்னைத்  தாக்கி
வருத்தும்  அணங்கெனக்  கருதினா ரென்றும், அணங்கொடு பொருது
வேறல்    மக்கட்   கரிதாதலின்,   அவர்   செயற்பாலது  வழிபாடு
ஒன்றேயன்றிப் பிறிதில்லை யாதலின் “பராவலின்” என்றும் கூறினார்.


“பலிகொண்டு     பெயரும் பாசம்”  எனவே  உயிர் கொள்ளாது
விடுத்தேகுவது   பெற்றாம்   .   பாசம்,   பேய்,   பேயை  உவமங்
கூறியதுபோல,  திருத்தக்க தேவரும் சீவகனை, “பெண்ணலங் காதலிற்
பேயு மாயினான்” (சீவக. 2010) என்று கூறுதல் காண்க.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!