நீலகிரி குறும்பர்களின் (ஆதிவாசி தேன் குறும்பர் ) ஜீவநதி பாடல்

ஒரு காட்டுநதியின் கதை

(நீலகிரி குறும்பர்களின் (ஆதிவாசி தேன் குறும்பர் ) ஜீவநதி பாடல் .. இதோ அந்தக் கடவுளின் குழந்தைகள் மலைத்தேன் சேகரிக்க இரவைக் கிழித்துக் கொண்டு புறப்படுகிறார்கள் .)
*
கருக்கல் எனும் கார்குழலி
கண்விழிக்கும் முன்னே
காட்டுமலைக் குறும்பர் 
கண்விழிப்பர் 
எழுதாத இலக்கியங்களாய்
மேலாடை கலைந்துறங்கும்
குறும்பிகளின்
கிளிபேச்சு கேட்குமுன்னே
அவர்கள் வெளிநடப்பர் 
கிளிபேச்சு கேட்டாலோ
கிளிமுகம் பார்த்தாலோ
போர்முனைக்கு அவர்கள்
புறப்படுவதில்லை..
சகுனம் சரியில்லையாம் ..
அது அவர்களின் வேதம் 
அவர்கள்
காட்டுநதிகள் என்றாலும்
கரைகட்டி நடந்து செல்லும்
அதிசய நதிகள் :
ஏடுகளாலும் இலக்கியங்களாலும்
எழுதத் தெரியாமல் போன
தேவ கதைகள் :
கோடுகளால் வரையமுடியாத
குறிஞ்சி ஓவியங்கள் ..! 
*
அது
மூங்கில்மலைக் காடு
யானைகளின் வீடு
"குறுமத்தி" மலை அடிவாரம்
ஒரு தேவதையின்
கால் சதங்கை கட்டிக்கொண்டு
காட்டு நதியொன்று ஓடும்... 
தாளங்களை நம்பாமல்
தனித்துவரும் பாட்டு
ஏழுநிற சுரங்களையும்
அந்த ஜீவநதி
எழுதிவந்து மீட்டும் ! 
நதிநீரைக் கொப்புளித்து
நாத இறைவனைக் கும்பிட்டு
விதியோடு விளையாட
மலையேறிச் செல்வர் குறும்பர்
அவர்கள்
தெய்வீகமானவர்கள் என்று
தெய்வத்துக்குத் தெரியும்
அந்நதியும் அறியும் 
*
பனியில் உறைந்த கைகள்
தீப்பந்தம் பிடிக்கும்
மின்சார தீபங்கள் எரியாத
அவர் குடிசைகளோ
ஒரு பகலுக்காய்த் தவிக்கும் 
அவர்கள்
விஞ்ஞானம் எட்டிப்பிடிக்காத
மண்ணின் கிரகங்கள் ! 
*
ஆகாயத்துக்குக் கீழே
"குறுமத்தி " மலைமேலே
இரவுமட்டும் இடையே
கருப்பாய் இருந்தது
அம்மம்மா அது
அதிபயங்கரமானது .. 
செங்குத்துப் பாறைகளில்
மலைத்தேனீக் கூடு ..
ராட்சச மலையின் தலைமீது
கயிறு கட்டிக் காத்திருப்பான்
ஒரு குறும்பன் 
ஒரு தீவிரவாதி போல 
மரணப் பள்ளத்தை நகைத்தபடி
கயிற்றில் இறங்குவான்
ஒரு குறும்பன் 
கொள்ளைக்காரன் போல 
துணைக்கு
தீப்பந்தம் வாயில் கவ்வி
இறங்குவான் இன்னொருவன்
ஒரு மந்திரவாதி போல 
அந்த தேவ குழந்தைகள் உச்சரிக்கும்
ஏதோ ஒரு மந்திரத்தில்
மயங்கி ஒதுங்குகின்றன
மலைத் தேனீக்கள் 
அங்கே அவர்களின்
உயிர்
இறந்து பிறக்கும் 
அவர்கள்
பசி நிறைந்த இடுப்பில்
கட்டிய பானைகளில்
அமுதமாய் தேனடை
சொட்டும். 
எவரெஸ்ட் மனிதர்களைத்
தோற்கடித்துவிட்டு
அந்தக் காட்டுவாசிகள்
குடிசைக்குத் திரும்பும்போது .
வானம் சிவந்திருக்கும் -அவர்
வாழ்க்கை கவிழ்ந்திருக்கும் ..! 
மலைத்தேன் விற்பனைக்கு வரும்
அது
மருந்துக்கும் போதவில்லை
இந்த ஏழை ராஜ்ஜியங்கள் ஏனோ
ராஜப் பார்வைகளுக்கு
எட்டுவதே இல்லை . 
*
அது
மூங்கில்மலைக் காடு,
யானைகளின் வீடு ,
"குறுமத்தி" மலை அடிவாரம்
தேவதையின் கால் சதங்கையை
கழற்றி எறிந்துவிட்டு, 
அந்தக் காட்டு நதி
கண்ணீராய் ஓடும்... (1994) 
*
("தரையில் இறங்கும் தேவதைகள் " நூலிலிருந்து )

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!