குறும்பர்களின் பூர்விகம் சென்னிநல்லூர் தான் சென்னை!

குறும்பர்களின் பூர்விகம் சென்னிநல்லூர் தான் சென்னை!
'சென்னை' என்பது, சென்னப்பநாயக்கரிடம் இருந்து நிலம் வாங்கியதால் வைக்கப்பட்ட பெயர் என, ஒரு சில வரலாற்று ஆய்வாளர் கருத்து கூறுகின்றனர். ஆனால், 12ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்ட,திருவொற்றியூர் கோவிலில், சென்னிநல்லுார் என்ற பெயர் வருகிறது. அது தான், சுருக்கமாக சென்ன பட்டணம் என பெயர் மாறியது என கூறும் வரலாற்று ஆய்வாளர்களும் உள்ளனர். அதற்கு ஆதாரமாக, சென்னை, பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள, 'சென்ன கேசவ பெருமாள்' கோவிலின் பெயரை குறிப்பிடுகின்றனர்.
பழமையான துறைமுகம்அதன் பழமைக்கு ஆதாரமாக, இன்றும், அக்கோவிலில் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருக்குடைகள், திருப்பதிக்கு கொண்டு செல்லப்படுவதை கூறுகின்றனர்.இந்நிலையில், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே, மதராச பட்டணம், குறும்பர்கள் புலியூர் கோட்டத்தின் கீழ் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாக கூறுகிறார், '2000 பிளஸ்' அமைப்பின் நிறுவனர், ரெங்கராஜ்.அவர் கூறியதாவது:
தற்போதைய, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதே புலியூர் கோட்டம். அதை, குறும்பர்கள் ஆண்டதாக, ஏராளமான கல்வெட்டுகள் கூறுகின்றன. குறும்பர்கள், வீரம் மிக்க, பழங்குடியினராக இருந்துள்ளனர். அவர்களில், இளந்திரையன் தொண்டமான் சிறந்த அரசனாக இருந்துள்ளான். அவன், வடதமிழகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அவன் பெயரில், வடதமிழகம், தொண்ட மண்டலம் என அழைக்கப்பட்டது.
குறும்பர்களுக்கு பின், சோழர், பல்லவர், பாண்டியர், விஜயநகர பேரரசர்கள் உள்ளிட்ட, 25 அரச பரம்பரையினர், தொண்டை மண்டலத்தை ஆண்டு உள்ளனர். சென்னை, புலியூர் கோட்டத்திலும், திருவள்ளூர் புழல் கோட்டத்திலும், காஞ்சிபுரம் எயில் கோட்டத்திலும் நிர்வாகம் செய்யப்பட்டு உள்ளன.புலியூர் என்பது, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளை குறிக்கும். தற்போது சென்னையில் உள்ள பல ஊர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. சென்னையில், நெசவு, மண்பாண்டம், உலோக பாத்திரங்கள், தங்க நகை தயாரித்தல், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் நடந்துள்ளன.
சென்னையில், பழமையான துறைமுகம் இருந்துள்ளது. அதன் மூலம், பல நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றுள்ளன. புலியூர் கோட்டத்தில், தற்போதைய போரூர், அப்போது போறுார் நாடு என்றும்; விருகம்பாக்கம், அப்போது விருகன் பாக்கம் எனவும்; பூந்தமல்லி, பூவிருந்தவல்லி எனவும்; பல்லாவரம், பல்லவபுரம் எனவும்; பாடி, திருவலி தாயம் எனவும் இருந்து உள்ளன.
புகழ் பெற்ற கல்லுாரிகள்
மேலும், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சோமங்கலம், மணிமங்கலம், குன்றத்துார், ஆதம்பாக்கம், வியாசர்பாடி, செம்பியம், வேளச்சேரி, அம்பத்துார் உள்ளிட்ட பல ஊர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. இந்த ஊர்களில் உள்ள பழமையான கோவில்களின் கல்வெட்டுகளில், கோவில் பூஜை, ஊர் நிர்வாகத்துக்கான தானம் வழங்கப்பட்ட செய்திகள் உள்ளன. ஊரின் குற்றங்களை விசாரிக்க, நீதிமன்றங்கள் இருந்தள்ளன. நீதிபதியாக தேர்ந்தெடுக்க தேவையான தகுதிகள், தகுதியின்மை குறித்து விரிவாக விளக்கப்பட்டு உள்ளன. 
விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் இருந்துள்ளன. கடன் கொடுப்பது, வசூலிப்பது, தள்ளுபடி செய்வது குறித்த சட்டதிட்டங்கள் இருந்துள்ளன. நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் பங்கீடு, நீர் மேலாண்மை குறித்தும், ஏரி பாதுகாப்பு குறித்தும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன. கல்விக்காக, பல மடங்கள் செயல்பட்டுள்ளன. புகழ் பெற்ற மருத்துவ கல்லுாரிகள் இருந்துள்ளன. மேலும், சைவ, வைணவ பெரியோர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களின் பாடல்கள், வருகை, ஆற்றிய சேவைகளும்கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தான், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்களை பார்த்து, வியாபாரம் செய்ய ஆங்கிலேயர் வந்தனர்.அவர்களுக்கு, சென்னையில் மிகக்குறைந்த விலையில், தரமான பருத்தி துணிகள் கிடைத்ததாலும், கடல்வழிக்கான துறைமுகம் இருந்ததாலும், மதராச பட்டணத்தை வாங்கி உள்ளனர். அதற்கு முன்பே, சென்னை பல ஊர்களோடு இணைக்கப்பட்டும், சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டும் வந்தது.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!