பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் நீலகிரி குன்றுகளில் சோலூர் மலை அடிவாரத்தில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் முல்லை நிலத்திற்கு உட்பட்ட குருப்படா என்னும் இடத்தில் முல்லை குறும்பர் இனத்தில் ஆதிபராசக்தி 7 பெண்களாய் பிறந்து மாரி, பண்ணாரி, பத்திரகாளி, பொக்கா, பகவதி, சாமுண்டி, மூகாம்பிகையாக பல்வேறு இடங்களில் எழுந்தருளியுள்ளதாக புராணம் கூறுகிறது.
பாரியூர் அம்மன் கோபி செட்டிப்பாளையம், பத்திரகாளியம்மன் மேட்டுப்பாளையம், பண்ணாரியம்மன் சத்தியமங்கலம், பொக்கா பொக்காபுரத்திலும், சாமுண்டி மைசூரிலும், மூகாம்பிகை மங்களூரிலும், பகவதி காடாம்புழா அம்மனாக மலப்புரத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இதில், நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரத்தில் உள்ள பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலூர் போன்ற கிராமங்களில் மக்கள் குலதெய்வமாகவும், லங்கூர் இனத்தை சேர்ந்த முல்லை குறும்பர் முதல் முதலாக அம்மனுக்கு கோவில் கட்டியும் வழிபட்டனர். இங்கு மாறுபட்ட 3 மூலஸ்தானங்கள் மற்றும் 3 தல விருட்சங்கள் உள்ள கோவில் என்ற பெருமை உள்ளது. முதல் மூலஸ்தானத்தில் வேங்கை மரம், இரண்டாவது மூலஸ்தானத்தில் வேங்கை மரம், 3வது மூலஸ்தானத்தில் அரச மரம் என தல விருட்சங்களாக உள்ளன.
பொக்காபுரம் கோவில் மூலஸ்தானத்தில் மாரியம்மனுடன் மசினியம்மன், சிக்கம்மன், கரியபெட்டன் ஐயன் ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இங்கு தொட்டில் கட்டுதல், கரகம் எடுத்தல் ஆகியவற்றால் தங்களது வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர். மற்ற கோவில்களை போன்று அர்ச்னை, கால பூஜை, மந்திர உச்சாடனைகள் இங்கு இல்லை. பக்தர்கள் தாம் விரும்பிய முறையில் வழிபடலாம்.
ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் இங்கு தேரோட்டம் நடக்கிறது. இந்த நேரத்தில் பொக்கா அம்மன், மசினி அம்மன் சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர் ஒரு சேர வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகமாக உள்ளது. இதனால், இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்கின்றனர்.
ஆண்டுதோறும் இந்து அறநிலையத் துறையினர், குறும்பர் இன ஆதிவாசியினர் மற்றும் படுகரின மக்கள் இணைந்து திருவிழாவை சிறப்பாக நடந்தி வருகின்றனர். 
இந்த திருவிழா நிறைவு பெற்ற பிறகு படுகர் இன மக்கள் 5 நாட்கள் ஹாலானி பண்டிகையை கொண்டாடுகின்றனர். பண்டிகையை தொடர்ந்து சோலூர், மாயார், மசினகுடி, சிரியூர், ஆனைகட்டி, சொக்கரல்லி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும்.


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!