குறும்பர் கடல் கடந்த கல்வெட்டும் வீர வரலாறும் கம்போஜத்தில் கால் வைத்தவன்

குறும்பர் கடல் கடந்த கல்வெட்டும் வீர வரலாறும் கம்போஜத்தில் கால் வைத்தவன்
கி. பி. 1860ஆம் ஆண்டு. ஹென்றி மகூத் என்ற தாவர இயல் நிபுணர் கம்போடியாவிற்கு வந்தார். ஆரவாரமற்று காலியாகிப் போன அற்புத நகரங்கள் சயாம் நாட்டில் இருக்கின்றன என்று மக்கள் கூறியதால் ஆசை மேலிட்டு மீகாங் நதியில் ஒரு தோணியில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு காலை வேளையில் சூரியோதய வர்ண ஜாலங்களுக்கிடையில் கரையில் மலைக்குன்றுகள் முளைத்தார்ப்போல் பிரம்மாண்டமான ஆலயங்கள் தலை தூக்கி நிற்பதை பார்த்து அதிசயித்தார்.
அதன்பின்தான் கம்போஜ் நாட்டின் புராதன நாகரிகம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 6000ம் 7000ம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மக்கள் வாழ்த்திருந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன.
இராமாயணத்தில் சீதையைத் தேடி வெற்றி கண்டா அனுமனும் அவரது இனமான வானரர்களும் தென்னிந்திய மக்களே என்று கூறுகிறார்கள். சுக்ரீவன் வானரங்களை அனுப்பும் இடங்களில் யவத்வீபம் , சுவர்ணத்வீபம் , ரூபாக்ய த்வீபம் என்ற இடங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இராமாயணக் காலத்திலேயே தென்னிந்தியர்களுக்கு இந்தக் கீழ்த்திசை தீவுகள் பற்றி தெரிந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
திரைகடல் ஓடி திரவியம் தேடி , வணிகம் புரிந்தவர்கள் தமிழர்கள் என்பதை சொல்லி வைத்திருக்கிறது. பர்மா , தாய்லாந்து , மலேயா , கம்போடியா , லாவோ , வியட்னாம் , சுமத்ரா , ஜாவா , பாலி , போர்னியோ என்று பல தேசங்களுக்க்கெல்லாம் கடல்வழியாக தமிழர்கள் பயணம் செய்திருக்கின்றனர். செங்கல் பட்டு மாவட்டத்தில் பாலாறு கடல் கலக்குமிடத்து வாயலூர் என்ற ஊரில் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ள பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனின் சாசனம் ஒன்று , அம்மனால் த்வீபலட்சம் என்ற தீவு போஷிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறது. காம்போஜ நாடு மைசோன் நகர கல்வெட்டில் ஒரு தகவல் உண்டு.
“அந்தண சிரேஷ்டனான கெளடண்யன் , துரோணரின் குமாரனான அச்வாத்தாமனிடமிருந்து பெற்ற ஈட்டியைப் இங்கு பாய்ச்சினான்” என்ற சொற்கள் அதில் இடம்பெற்றுள்ளது. ரிஷி கெளண்டன்யன் என்பவன் பிறப்பால் தமிழ் நாட்டினன். அவன் கப்பல் ஏறி பயணித்து ஒரு நாட்டில் இறங்குகிறான். காடுகள் நிறைந்த நாகரீக வாசனையே படாத அந்த நாட்டில் , நாகா இளவரசி ஸோமா என்பவளைக் கண்டான். நிர்வாணமாயிருந்த அவளை போர்த்துவதற்காக தன் உத்தரீயத்தை தூக்கி எறிந்தான். அப்பெண் அவனுக்கு மனைவியானாள். அத்தேசம் இவனுக்கு தன் மனைவியின் மூலமாக கிடைக்க , கெளண்டன்ய ஸோம வமிசம் உதித்தது.
அந்த தேசமே காம்போஜம் என்றழைப்பட்டது. கெளண்டன்யன் என்பது அவனது இயற்பெயர் அல்ல கோத்திரம்தான். கம்பு ஸ்வயம்பு என்பதே அவன் பெயர். கம்பு என்ற பெயர் காஞ்சியுடன் சம்மந்தப்பட்டிருப்பதை நாம் அறிய முடியும். கம்பா நதி , ஏகம்பன் , கம்பவர்ம பல்லவன் , ஏகம்ப வாணன் என்பன போன்ற பெயர்கள் காஞ்சியிலில்தான் நிலவின. கம்பு ஸ்தாபித்தது முதலில் கம்புஜம் என்று அழைக்கப்பட்டு பின் கம்போஜா என்று மருவியது. இன்று கம்போடியா என்றாகிவிட்டது. பல்லவர்களை போல் இந்நாட்டு மன்னர்களும் 'வர்மன்' என்ற பட்டபெயருடன் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களால்தான் காம்போஜத்தில் பிரம்ம , மகேச , விஷ்ணு வழிபாடுகள் ஏற்பட்டன. நம்பிரதேசத்தில் காணப்படும் அதனை சிவசொரூபங்களும் ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தச புஜங்கள் கொண்ட தாண்டவமூர்த்தி உமை ரிஷபாரூடனார் உமை அர்த்தநாரி இப்படிப் பலப்பல அரச முத்திரைகளில் பொறிக்கப்பட்டது ஓம் என்ற அட்சரம்தான். பாண்டேசிராய் என்ற கிராமத்தில் நம் உமாமகேச்வரன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தில் சிம்ம விஷ்ணு பல்லவ மன்னன் இரு மனைவியுடன் சிற்பமாய் நிற்கும் சிலை உண்டு. அதைப்போலவே ஒரு சிலை கம்போஜாவிலும் உண்டு.
இந்திரவர்மன் என்ற மன்னன் காலத்தில் பேகாங்கில் பிரமாண்டமான சிற்பமொன்று வடிக்கப்பட்டது. உமை, கங்கை இருபுறம் இருக்க சிவன் உள்ளது போல் , மன்னன் தன் மனைவியருடன் இருப்பதாக காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்ட்டுள்ளது. தொண்டை மண்டலப் பிரதேசப் பழைய சரித்திரத்தில் , அப்பகுதியை குறும்பர்கள் ஆண்டதாக குறிப்புக்கள் உள்ளன. இவர்களை வென்று தொண்டைமான் என்பவன் ஆட்சி புரிந்தான். இப்பிராந்திய சிவாலயங்களில் உள்ள நந்தி சிலையானது சந்நிதியை நோகாமல் கோபுர வாயிலை நோக்கிய வண்ணம் இருக்கும். குறும்பர்களை வெல்ல தொண்டைமானுக்கு சிவபெருமான் தன் வாகனத்தை அனுப்பியதாக உள்ள புராணத்தகவலை ஒட்டி எழுந்த சிற்பங்கள் அவை. தென் காம்போஜத்தில் ஒரு சம்ஸ்கிருதக் கல்வெட்டு…
“விப்ரநாம் பவனம் குறும்ப நகரே ப்ரா க்ருதவாயாம்
ப்ரதிமாம் ஸ்வர்ணரசிதாம்.”
(அந்தணர் வசிக்கும் குறும்பர் நகரத்தில் ஒரு சுவர்ணப் பிரதிமம்)
“குறும்ப நகரி துகா குப்தா யேனாவகுணை
இந்திரஜித் பயா விக்ரஸ்தான் ஜஹா சேவாமராவதீம்”

(உயர்ந்த சீலங்களினால் காப்பாற்றப்பட்ட குறும்ப நகரம் , இந்திரஜித்திடம் கொண்ட பயத்தினால் கிலேசமுற்ற அமராவதியை பார்த்து சிரித்தாராம்)
மேற்சொன்ன கல்வெட்டு சாசனங்கள் காஞ்சியை மையமாகக் கொண்ட தொண்டை மண்டலத்து குறும்பர்கள் கடல் கடந்த்து கம்போஜத்தில் குடியேறிருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. எழுத்து என்று எடுத்துக் கொண்டால் இங்குள்ள எழுத்துக்களில் பிராமி , பல்லவம் புகுந்துள்ளதைக் காண முடியும். புர , ஆலய , பூர்வதேச , சிவபுர , சிவாஸ்தான் , சங்கராலய என்று கம்போஜ தேசத்தில் புழங்கும் பெயர்கள் நம் காஞ்சியிலும் உண்டு. நாகப்பட்டினம் என்ற ஊர் ஒன்றும் அங்கு உண்டு. நமச்சிவாய என்ற பெயரையும் சூட்டி கொண்டிருக்கின்றனர்.
சம்பா
கொஞ்சம் கிழக்கு திசையில் கடலோரம் உள்ள நகரம் சம்பா. (இன்றைய வியட்நாம்.) இங்கு முக்க்கிய நகங்கரங்களாக மைசோன் , போனகர் , இரண்டும் இருந்திருக்கின்றன. இரண்டும் சிவனுக்குரிய நகரமாய் திகழ்ந்தன. லிங்கம் , முகலிங்கம் , ரூபபேரம் என்று சிவனை மூன்றுவிதமாக வடித்திருக்கிறார்கள். மைசோன் நகர லிங்கம் அரசாங்க தெய்வமாகக் கொண்டாடப்பட்டது. கி. பி. நான்காம் நூறாண்டில் மன்னன் பற்றவர்மன் தன் பெயரால் இந்த பத்ரேஸ்வர லிங்கத்தை அமைத்தான். போ என்றால் ஸ்திரி (ஸ்ரீ) என்று பொருள். ஸ்ரீநகர் என்றிருப்பதை போல் போநகர் நகரம் ஏற்பட்டிருக்கிறது.
லாவோ காம்போஜ நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படுகிறது. லவனுடைய நாடுதான் லாவோ ஆகியது. இன்றும் அங்குள்ள புராதான ஊர் ஒன்றின் பெயர் லவபுரி என்றழைப்படுகிறது. ஒரு குன்றின் சிகரத்தில் ஒரு தூண். அதில் ஒரு சாசனம் , மகேந்திரவர்மன் என்ற அரசன் ஒரு சிவலிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்தான் என்று கூறுகிறது. ஐராவதத்தில் இந்திரன் ஏறி வருவது போன்ற சிற்பம் , கருடவாகனத்தில் விஷ்ணு போன்ற சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள தர்மசாலை ஒன்று வடமொழியில் சாலாதாரம் என்று அழைக்கப்படுகிறது. கல்வி பயில குருகுல முறை நம் நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது.
அது இன்றும் லாவோ வில் கடைபிடிக்கப்படுகிறது. அப்சரஸ் , கின்னரர் , நாகர் , கருடன் இப்படி பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் ஆலய அமைப்பு நம் ஆலைய அமைப்புக்களை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. அப்சரஸ் , நந்தி , நாகர் , போன்ற சிற்பங்களும் உள்ளன. சிவன் மேரு பர்வத்தில் உறைகிறார் என்பது நமது ஐதீகம். அதை ஒட்டி அங்கோர்வாட் ஆலயத்திலும் சிகரங்கள் உண்டு. நீராழிமண்டபம் , பிரகாரங்கள் , கோபுரங்களுடன் விளக்குகின்றன. ஆலய பிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு மைல் நீளம் உள்ளன. மத்தியில் ஒரு தாமரை மலர்ந்தது போல் கர்ப்பக்கிரகம் ஓங்கி நிற்கிறது. இதைப் பார்த்து தான் ஹென்றி மகூத் ஸ்தம்பித்து நின்றாராம். நம் பல்லவர் ஆலயங்களில் தினம் பாரதம் வாசிக்க நிலம் விட்டது பற்றி சாசனங்கள் உள்ளன.
கம்போடியாவில் தினம் ஒருபி பாரத பிரவசனம் செய்ய வேண்டுமென்ற கல்வெட்டு இருக்கிறது. சுமத்ரா தமிழ் சரித்திரத்தில் பன்னை , இலாமூர் தேசம் எனக் குறிக்கப்பட்ட நகரங்கள் சுமத்ராவில்தான் உள்ளன. சுன்னாம்பு மண் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் சிவன் , நந்தி , பிரம்மா போன்ற தெய்வங்கள் சுமத்ராவில் உள்ள ஆலயங்களில் காண முடிகிறது.
கி. பி 1031ஆம் ஆண்டில் சோழ அரசன் முதலாம் ராசேந்திரன் கடாரம் சென்று விசயோத்துங்ககவர்மனை வாகை சூடி , சுமத்திராவின் கீழ்க்கரை , மேற்கரை மலையூர் , கெடாவிற்கு தெற்கே இலங்கா சோகம் , மாப்பாப்பாளம் , மலாயாவிற்கு மேற்கு புறம் தகோபா , தெம்பளிங்க் எனப்படும் மாதமா லிங்கம் , சுமத்திராவின் வடப்பகுதி , இலாமுரி தேசம் , நிகோபர் தீவுகளான நக்கவாரம் போன்றவற்றை வென்றார் என்று ராசேந்திர சோழனின் கல்வெட்டு சாஸனம் குறிப்பிடுகிறது.
ஜாவா
ஜாவா தீவில் கி. பி ம் ஆண்டில் செதுக்கப்பட்ட சாசனத்தின்படி சஞ்சய என்ற அரசர் ஒரு குன்றின் மேல் தேச அமைதிக்காக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகிறது. ஜாவா சிவனின் தோற்றம் நம் சிவனைப் போலவே ஜடாமுடி , சிரசில் கங்கை , திரிநேத்ரனாய் காட்சியளிக்கிறது. யமன் , அக்னி , குபேரன் , அவன் மனைவி ஹரிதி , காமன் போன்றவர்கள் திகபாலகர்கள். இறந்த மூதாதையர்கள் வழிபாடு , புனித நீராட்டல் எல்லாம் தமிழகத்தை போலவே நடைபெறுகிறது. அங்குள்ள ஒரு நதியின் பெயரும் காவிரி என்றே வைக்கப்பட்டுள்ளது.
இராமாயண சிற்பங்கள் கலா ரத்தினங்களாக அமைந்துள்ளன. பண்டைய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் யவத்வேதமே ஜாவா என மருவியுள்ளது ஆதிகாலத்தில் இங்கு குடியேறிவர்களில் முக்கியமானவர் அகஸ்தியர். இவர் துங்கபத்ரா நதிக்கரைவாசி. ஜாவாவில் ஒரு ஆலயத்திரள் , மகாபலிபுர பஞ்சபாண்டவ ரத்தங்களை போலவே காட்சியளிக்கிறது. பெயர்கள் புதிஷ்ட்ர , அர்ச்சுன , பீம என்றே சூட்டப் பட்டிருக்கிறது. பிராம்பணம் என்ற இடத்தில தட்சமன்னன் நிறுவிய சண்டி கோயிலில் இராமாயண சேது பந்தம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜாவாவில் ஒட்டிக் கொண்டிருப்பது பாலித் தீவு. நாம் பின்பற்றும் சடங்குகளை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
மனுஷ்ய யக்ஞம் , இறந்தவர்களுக்கு பித்ரு யக்ஞம் இப்படி பல உண்டு. நம் ஊர் போலவே தெய்வங்களை தோளில் ஊர்வலமாய் தூக்கிச் செல்கின்றனர். இத்தீவிலுருந்து வடக்கே உள்ள போர்னியோ தீவில் வேத முறைகள் அனுஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. முழவர்மன் என்ற அரசன் வேள்விகள் நடத்த இந்தியாவிலிருந்து வேத விற்பன்னர்களை வரவழைத்திருக்கிறான். தமிழர்களின் கலாச்சாரம்தான் இவாறாக பிலிப்பைன்ஸ் வரைக்கும் பரவியுள்ளது. இந்நாடுகளின் மொழியின் வேரும் அங்கிருந்து தான் வந்திருக்கிறது. சமயம் , கலை , இலக்கியம் என்று எந்த கோணத்தில் ஆராய்ந்தாலும் கிழக்கு ஆசிய நடுகல் அனைத்திலுமே நம் தென் தமிழ் மண்ணின் கலாச்சாரம்தான் புதைந்து கிடக்கின்றன என்பதைக் காணமுடிகிறது

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!